சென்னையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை தீவுத்திடலில் சாகச மற்றும் பாரம்பரிய விளையாட்டு அரங்குகளை சுற்றுலா துறை அமைத்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலா துறை செயலர் இறையன்பு தெரிவிக்கையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகமும் மெசர்ஸ் ரோகிணி ஓட்டல்ஸ் நிறுவனமும் இணைந்து சென்னை தீவுத்திடலில் பாரம்பரியம் மற்றும் சாகச விளையாட்டு அரங்குகளை அமைத்துள்ளன.
இந்த அரங்குகளில் முன் காலத்தில் திருவிழாக்களில் நடத்தப்பட்ட வழுக்கு மரம் ஏறுதல், உரியடித்தல், அம்பு எய்தல், மலை ஏறும் பயிற்சி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
பந்து வீசும் இயந்திரம் மூலம் கிரிக்கெட் விளையாட்டு, சிறுவர் கார் மற்றும் பைக் ரேஸ், ரப்பர் கயிறு மூலம் 35 அடி உயரத்தில் இருந்து குதித்தல், மறைந்திருந்து துப்பாக்கி சுடுதல் போன்ற சாகச விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
முழுமையான பணிகள் முடிவடைந்தது, இன்னும் சில நாட்களில் இது பொதுமக்களுக்காக திறந்துவிடப்படும் என்று அவர் கூறினார்.
இதுபோன்ற சாகச விளையாட்டு அரங்குகள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் மாமல்லபுரத்திலும் அமைக்கப்படுகின்றன என்று இறையன்று மேலும் பேசுகையில் தெரிவித்தார்.