உலகப் புகழ்பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு, நவீன ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பிற்காக அமர்த்தப்படுகின்றனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, பயங்கரவாத அமைப்புகள் தாஜ்மகாலை குறிவைக்கலாம் என்று நமது உளவு அமைப்பிடம் இருந்து தகவல் கிடைத்துள்து. எனவே, தாஜ்மகாலுக்கு பாதுகாப்பு பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
தாஜ்மகால் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரைவில் நவீன மிகச்சிறப்பான பயன்பாடு கொண்ட ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளது.
தாஜ்மகாலின் பாதுகாப்பிற்காக, கோபுரங்களில் இருந்து கண்காணிப்பு மற்றும் அதிக எண்ணிக்கையிலான கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. தற்போது தாஜ்மகாலில் பாதுகாப்புக்காக உள்ள வீரர்கள் சிவப்புப் பகுதி, மஞ்சள் பகுதி என்று இரு பிரிவுகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மஞ்சள் பகுதியில் பணியாற்றும் வீரர்களுக்குத்தான் ஏகே 47 துப்பாக்கிகளும், நவீன கைத் துப்பாக்கிகளும் வழங்கப்பட உள்ளது.
மஞ்சள் பிரிவில் பணியாற்றும் 27 துணை ஆய்வாளர்களுக்கு நவீன கைத்துப்பாக்கியும், 57 தலைமைக் காவலர்களுக்கு ஏகே 47 துப்பாக்கியும் வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.