ஒவ்வொரு ஆண்டும் சென்னைத் தீவுத்திடலில் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சுற்றுலாப் பொருட்காட்சி நிறைவடைந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் வகையில் கோடை திருவிழா துவங்கியுள்ளது.
இந்த கோடைத் திருவிழாவின் முக்கிய அம்சமாக குற்றால அருவியைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள அய்யன் அருவி அதிகமான மக்களை கவர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து உணவு வகைகளையும் ஒரே இடத்தில் ருசிக்கலாம். கோடைத் திருவிழா பற்றி கேள்விப்பட்டதும் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் தீவுத்திடலுக்கு வந்து கோடைத் திருவிழாவை கொண்டாடிச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கோடை திருவிழா நடைபெறுகிறது. இதனை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கடந்த வாரம் துவக்கி வைத்தார். இந்த திருவிழாவில் குற்றால அருவி, தாஜ்மகால் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்காக பல்வேறு வகையான ராட்டினங்கள், நீர் விளையாட்டுகள் உள்ளன. இங்கு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அடங்கிய பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் இங்குள்ள உணவகங்களில் தமிழகம் முதல் டெல்லி, காஷ்மீர் வரை அனைத்து மாநில உணவு வகைகளையும் ஒரே இடத்தில் ருசி பார்க்கும் வகையில் பல்வேறு வகையான உணவுகள் சமைத்து பரிமாறப்படுகின்றன.
நெல்லை அல்வா, மதுரை ஜிகர்தண்டா போன்ற ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பு சேர்க்கும் உணவுப் பண்டங்களும் கிடைக்கின்றன. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களுக்கும் பஞ்சமில்லை.
குற்றாலத்தை நேரில் கொண்டு வந்தது போல அய்யன் அருவியை அமைத்திருக்கிறார்கள். அய்யன் அருவியைப் பார்ப்பதற்கும், ஆனந்த குளியல் போடுவதற்கும் மக்கள் கூட்டம், கூட்டமாக வருகிறார்கள். கூட்டத்தை சமாளிப்பதற்காக அணி, அணியாக குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு அணி அதிகபட்சம் அரை மணி நேரம் குளிக்கலாம். அருவிக்கு முன்பு அமைக்கப்பட்டு உள்ள குடில்களில் அமர்ந்தபடி அருவியின் அழகை ரசிக்கலாம். மூலிகை குடில்களில் மசாஜ் செய்யப்படுகிறது.
அய்யன் அருவியில் குளித்துவிட்டு வெளியே வந்ததும் வறுத்த மீன்களும், தந்தூரி சிக்கன்களும் விற்கப்படுகிறது. குளித்து விட்டு வந்து இதனை சூடாக ருசிக்கவும் செய்யலாம்.
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை இங்கு அப்படியே தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். இங்கு அமைக்கப்பட்டு உள்ள தாஜ்மகாலைப் பார்க்க உள்ளே நுழைந்ததும் தாஜ்மகாலை சுற்றி அமைந்துள்ள கட்டிடங்கள், கலாசார சின்னங்கள், பழைய கோட்டை, தாஜ்மகாலின் அடிப்பகுதியில் கட்டப்பட்டு உள்ள ஷாஜகானின் தாய், தந்தையரின் கல்லறைகள் ஆகியவை வண்ண ஓவியங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கோடை திருவிழாவைக் காண பொதுமக்களுக்கு முற்பகல் 11 மணி முதல் இரவு 11 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது.