சிதறால் மலைக்கோயில் சுற்றுலா விழா
, சனி, 5 செப்டம்பர் 2009 (11:43 IST)
கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள சிதறால் மலைக்கோயில் சுற்றுலா விழா நாளை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க, கலாச்சாரத்தை பரைசாற்றும் பல கோயில்களும், வரலாற்றுச் சின்னங்களும் பராமரிப்பின்றியும், வெளி உலகிற்குத் தெரியாமலும் உள்ளன. அவற்றை பொலிவுடன், மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.அதன் அடிப்படையில், கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள சிதறால் மலைக் கோயிலில் சுற்றுலா விழா 2009 என்ற விழாவை நடத்துகிறது சுற்றுலாத் துறை.இந்த சிதறால் மலைக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், இது ஒரு மிகப்பெரிய குகைக் கோயிலாகும். இந்த கோயிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.இந்த குகைக் கோயில் 13ஆம் நூற்றாண்டில் பகவதி கோயிலாக மாற்றப்பட்டது. எனினும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள் மற்றும் உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது.சிற்பக் கலையின் மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய தலமாக இது விளங்குகிறது.சிதறால் மலைக்கோயில் சுற்றுலா விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் துவங்குகிறது.விழாவினை சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் என் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.
காலை 10 மணி அளவில் நாஞ்சில் நாதன் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும், காலை 11 மணியளவில் கலைப் பண்பாட்டுத் துறை திருநெல்வேலி மண்டலம் வழங்கும் கிராமியக் கலை நிகழ்ச்சியும், பகல் 12 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட ஜெயின் சங்கம் வழங்கும் கலை நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.இது குறித்து மேலும் தகவல்களை சென்னை வலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் கேட்டறிந்து கொள்ளலாம்.