கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கான கட்டணங்களைக் குறைக்க தேவசம் போர்டு முடிவு செய்து உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், 2 மாதங்கள் நீடித்து இருக்கும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை ஆகிய காலங்கள் மிக பிரசித்தி பெற்றவை. இந்த காலங்களில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக இங்கு வருவது வழக்கம்.
மேலும் இந்த சீசன் காலங்களில், பக்தர்களின் பங்களிப்பாக பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுவது உண்டு. இதற்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் பல ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கட்டண உயர்வு மிக அதிக அளவில் இருந்ததால் பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து வழிபாட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மண்டல பூஜை காலம் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே எஞ்சி உள்ள நிலையில், வழிபாட்டு கட்டண நிர்ணயம் தொடர்பாக, தேவசம் போர்டின் சிறப்பு ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேவசம் போர்டு தலைமை ஆணையாளர் கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
சமீபத்தில் உயர்த்தப்பட்ட வழிபாட்டு கட்டணத்தை குறைத்து, புதிய வழிபாட்டு கட்டண பட்டியலை அங்கீகாரத்திற்காக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது என்று இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வரும் மண்டல பூஜைக்கு முன்னதாக வழிபாட்டு கட்டண குறைவு இருக்கும் என்று கூறப்படுகிறது.