குழந்தையின் மூளை ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.
கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை.
கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் நீயூரோன்கள் உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில் கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப்பட்டவை.
குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும். தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல் ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும். நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி, விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மனவளர்ச்சி இருக்கும்.
பிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் 3 ஆண்டுகள் வேகமாக இருக்கும். குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி, அவர்கள் வளரும் சூழலையும், அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்.