94வது ஆஸ்கர் விருது விழாவில் ஜப்பானிய திரைப்படமான ட்ரைவ் மை கார் சிறந்த உலக சினிமாவிற்கான விருதை வென்றுள்ளது.
உலகம் முழுவதும் சினிமா துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிகம் பேசப்படும் விருதாக அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் உள்ளன. இந்த ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
கடந்த 92வது ஆஸ்கர் விழாவில் சிறந்த உலக சினிமாவிற்கான விருது தென்கொரிய படமான பாரசைட் படத்திற்கு வழங்கப்பட்டது. அப்போது முதலே ஆஸ்கரின் பார்வை ஆசிய திரைப்படங்கள் மீது விழுந்துள்ளதாக பேச்சு அடிபட தொடங்கியது. ஆனால் கடந்த முறை “Another Round” என்ற ஆங்கில படத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த முறை சிறந்த உலக திரைப்படத்திற்கான விருது “ட்ரைவ் மை கார்” என்ற ஜப்பானிய படத்திற்கு கிடைத்துள்ளது. ரியுசுகே ஹமாகுச்சி இயக்கியுள்ள இந்த படம் பிரபல ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகாமி எழுதிய சிறுகதையின் தழுவல் ஆகும்.
இதுவரை ஆஸ்கரில் கௌரவ விருதுகளை மட்டுமே ஜப்பான் பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 2008ல் வெளியான Departure தான் முதல் ஆஸ்கர் விருது பெற்ற ஜப்பானிய படமாக இருந்தது. தற்போது 14 ஆண்டுகள் கழித்து ட்ரைவ் மை கார் ஆஸ்கர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.