போன் பூத், டெட் மேன் டவுன், டோட்டல் ரீகால் போன்ற முக்கியமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் காலின் ஃபாரெல். சினிமாவில் நடிக்க இந்த ஐரிஷ் நடிகருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதைவிட பெரிய வாய்ப்பு தொலைக்காட்சியிலிருந்து வந்துள்ளது.
அதுபற்றி பார்க்கும் முன் ஹெச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ட்ரூ டிடெக்டிவ் சீரிஸை பற்றி சொல்ல வேண்டும். அமெரிக்க தொலைக்காட்சிகளில் சீரியல்கள் சினிமா போலவே பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும். அங்கு எடுக்கப்பட்ட துப்பறியும் தொடர்களில் இன்றும் முதலிடத்தில் இருப்பது ஹெச்பிஓ வில் ஒளிபரப்பான ட்ரூ டிடெக்டிவ் சீரிஸ். மெக் கன்னகி, வூடி ஹாரல்சன் நடித்திருந்த இந்த சீரிஸ் உலகம் முழுவதும் மகத்தான வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாவது பாகத்தை தற்போது எடுக்கின்றனர்.
முந்தையதில் இரண்டு பேர் என்றால் இரண்டாவதில் நான்கு பேர். அதில் முக்கியமான கதாபாத்திரம் காலின் ஃபாரெலுக்கு. சினிமாவில் கிடைப்பதைவிட அதிக சம்பளம், அதைவிட அதிக பாப்புலாரிட்டி. விரும்பி ட்ரூ டிடெக்டிவ் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் காலின்.