இந்திரன், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடியுண்ட அனுமன் இடது தாடை உடைபட்டு விழுந்தார். இறந்தது போலவே கிடந்தார்.
தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்தது போல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார்.
வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு தேவர்களும் கந்தர்வர்களும்கூட விதிவிலக்-கல்ல. எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.
இறந்துகிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட பிரம்மா தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் மீண்டு எழுந்தார்.
சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
வருணன் - காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார்.
குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.
விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்-பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார்.
பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும் பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும், அனுமன் தான்விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார். நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும் என்றும் வரமளித்தார்.