திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மகாதீபம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்று. கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை திருவிழாவில் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26ம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அன்றிலிருந்து 11 நாட்களுக்கு தொடர்ந்து இந்த தீபம் மலை உச்சியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் என்பதால் மகா தீப தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை வந்த வண்ணம் இருந்தனர். அதன்படி 11 நாட்களுக்கு தினமும் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இன்றுடன் 11 நாட்கள் முடிவடையும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
பின்னர் நாளை தீப கொப்பரை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தபின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும்.