பாபா காட்டு வாழ்க்கைக்கு விடை கொடுத்து விட்டு சீரடி கிராமத்துக்குள் குடியேற முடிவு செய்தார். இதைத் தொடர்ந்தே சீரடி ஊரின் மத்தியில் பாழடைந்து கிடந்த மசூதியில் பாபா குடியேறினார். அதன் பிறகும் பாபாவுக்கு உணவு கொடுப்பதை பையாஜிபாய் நிறுத்திக் கொள்ளவில்லை.
தினமும் மதியம் உணவு சமைத்து எடுத்து வந்து பாபாவுக்கு அளித்தார். தன் வாழ்நாளின் கடைசி வரை அவர் இந்த பழக்கத்தை வைத்திருந்தார். பாபாவுக்கு உணவு கொடுத்ததற்காக அவர் எந்த ஒரு சலுகையையும் பெறவில்லை. பாபாவிடம் எந்த பிரதிபலனையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
இப்படி பிரதிபலன் பாராமல் இருந்ததால்தான் பாபாவுக்கும் பையாஜி பாய்க்கும் இடையே ஆத்மார்த்தமான நட்பு நிலவியது. இந்த பேரன்பு குறித்து ஒரு தடவை பக்தர்களிடம் பேசும்போது பாபா கூறியதாவது:-
பையாஜிபாய் முற்பிறவியில் என் சகோதரியாக இருந்தார். அந்த பிறவியிலும் எனக்கு உணவு கொடுத்தது அவர்தான். அன்று அவர் காட்டிய அன்பு இன்றும் நீடிக்கிறது. இவ்வாறு கூறிய பாபா, “இந்த பிறவியில் இவர் என் தாய்” என்று மனதார வாழ்த்தினார். பாபாவால் முதன் முதலில் “அம்மா” என்ற சிறப்பு அந்தஸ்துடன் அழைக்கப்பட்ட ஒரே பக்தை பையாஜிபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பையாஜிபாயின் மகன் தத்யா பட்டீலும், பாபா மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்தார். பாபாவுக்கு தேவையான எல்லா பணி விடைகளையும் செய்து கொடுத்தார். சிறு வயது முதல் இளம் வயது வரை தனக்கு தினமும் உணவு தந்த பையாஜிபாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தத்யா பட்டீலுக்கு எல்லா உதவிகளையும் சாய்பாபா செய்தார். அவர் ஆசியால் தத்யாபட்டீல் மிகப்பெரிய கோடீசுவரராக மாறினார்.
மிகப்பெரும் செல்வந்தராக மாறிய பிறகும் தத்யா பட்டீலின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பாபாவுக்கு தினசரி செய்ய வேண்டிய கடமைகளை செய்தார்.
ஒரு பக்தன், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், பாபாவிடம் எப்படி அன்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பையாஜி பாயும், தத்யாபட்டீலும் திகழ்ந்தனர்.