சபரிமலை ஐயப்பன் கோயில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடை திறக்கப்பட்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெறும் புனித தலமாகும். இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்கின்றனர். மாதத்தின் முதல் நாளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தற்போது நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டுப் பெருவிழாவுக்காக, ஏப்ரல் 1ம் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நினைவாக, ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 1, 2, 4, 6, 8 கிராம் எடைகளில் தயாரிக்கப்பட்ட இந்த டாலர்கள், ஏப்ரல் 14ம் தேதி விஷூ பண்டிகையன்று விற்பனைக்கு வருகிறது.
இந்த டாலர்கள், பூஜை செய்யப்பட்ட பிறகு ஆன்லைனிலும் தேவசம்போர்டு அலுவலகங்களிலும் கிடைக்கும். தரமான 916 தங்கத்துடன் தயாரிக்கப்பட்டு, விலை எடையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோல், 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டாலர்கள் ரூ.500க்கு விற்கப்பட்டது.