பழனி மலையில் புகழ்பெற்ற தைப்பூச திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நீடிக்கும் இந்த புனித நிகழ்வில், வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தந்த சப்பரம், தோலுக்கிணியாள் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. செவ்வாய் மாலை நடைபெற்ற தேரோட்டத்திற்குப் பிறகும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு, 9ஆம் நாள் விழா நிறைவாக, வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
இன்று, 10ஆம் நாள் நிகழ்ச்சியாக, தெப்பத் தேரோட்டத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதைத் தொடர்ந்து, இரவில் கொடியிறக்கம் நடைபெற்ற பிறகு திருவிழா நிறைவு பெறுகிறது.