திருச்சி கே.கே.நகர், இந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, வேத மந்திரங்கள் முழங்க, திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி ஐந்து கால பூஜைகள் நடத்தப்பட்டன. சிறப்பு ஹோமங்கள், வேத பாராயணங்கள் மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சமய சடங்குகள் நடத்தப்பட்டன. பூஜைகளின் முடிவில், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்வும் நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான இன்று காலை, மஹா பூர்ணாஹுதி மற்றும் பல சடங்குகளுக்கு பிறகு, வேத பண்டிதர்கள் மேள தாளங்கள் முழங்க புனித கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். காலை 8 மணி அளவில், ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா, கோவிந்தா" என்று பக்தி கோஷம் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.