மைசூர் தசரா திருவிழாவிற்கு பிறகு, தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, இந்த ஆண்டு கோலாகலமாக தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த 12 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இத்திருவிழாவில், பக்தர்கள் தங்கள் வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்சினைகளான தொழில் முன்னேற்றம், வேலைவாய்ப்பின்மை, திருமணத் தடைகள், தீராத நோய்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் நீங்குவதற்காக நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த நேர்த்திக்கடனை செலுத்த, ராஜா, ராணி, போலீஸ், பெண், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வேடங்களை அணிவார்கள்.
விநாயகர், பார்வதி, பரமசிவன், அம்மன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற தெய்வீக வேடங்களை அணிபவர்கள் குறைந்தது 21 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொள்வார்கள்.
காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி ஏந்துபவர்கள், வேல் குத்தி வருபவர்கள் ஆகியோர் 61, 41, 31 அல்லது 21 நாட்கள் எனத் தங்களது வசதிக்கேற்ப விரதத்தைத் தொடங்குவார்கள்.
தசரா திருவிழாவுக்கான காளி வேடத்தின் சடைமுடி, கிரீடம், சூலாயுதம், நெற்றிப் பட்டை, வீரப்பல் போன்ற பொருட்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தசரா திருவிழா நெருங்குவதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இப்போதே உடன்குடிக்கு வரத் தொடங்கிவிட்டனர். இதனால், உடன்குடி பகுதி களைகட்டத் தொடங்கி உள்ளது.