நிகழும் சித்திரை 21ம் தேதி சதுர்தசியில் நிகழும் நரசிம்மர் அவதரித்த நாளான நரசிம்ம ஜெயந்தியில் விரதமிருந்து நரசிம்மரை சேவிப்பது பல நன்மைகளை தரும்.
விஷ்ணு பெருமானின் 10 அவதாரங்களில் சிறப்பு மிக்க அவதாரம் நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் முழுவதும் விலங்காகவோ அல்லது முழுவதும் மனிதனாகவோ மட்டுமே இருக்கும். சிங்கத்தின் தலையையும், மனிதனின் உடலையும் கொண்ட சிறப்புமிக்க அவதாரம் நரசிம்ம அவதாரம்.
நரசிம்ம அவதாரம்:
ஸ்ரீ விஷ்ணு பெருமானின் அவதாரத்தில் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம். நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகத்திலே அநீதியை அழிக்க அவதரித்தவர் நரசிம்மர். தமிழ் மாதமான வைகாசியில் வளர்பிறை ப்ரதோஷம் ஸ்வாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் நரசிம்மர்.
இரண்ய கசிபை கொன்று பிரகலாதனையும், மக்களையும், தேவர்களையும் காத்த மகா கடவுளான நரசிம்மரை அவர் அவதரித்த தினத்தில் விரதமிருந்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் அருளும்.
இந்த 2023ம் ஆண்டு மே 4ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நரசிம்மரை மனதில் நினைத்து விரதமிருந்து வழிபட்டால் காலத்திற்கும் உடன் நின்று அருள் புரிவார்.
நரசிம்ம ஜெயந்தி விரதம்:
மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மர் அக்னியே குடிக் கொண்டவர். நரசிம்ம ஜெயந்தி நல்ல கோடை காலத்தில் நிகழ்வதுவும் அவரது உக்கிரத்தாலேயேதான். நரசிம்ம ஜெயந்தி அன்று காலையே வீட்டை முழுவதும் சுத்தம் செய்து, நீராடி விரதம் மேற்கொள்ள வேண்டும்.
நரசிம்மருக்கு விரதம் இருக்கும்போது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அறவே எடுத்துக் கொள்ளக் கூடாது. விரத காலத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தையோ அல்லது ஆழ்வார்களின் பாசுரங்களையோ பாராயணம் செய்வது சிறப்பு
ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த காலக்கட்டத்தில் விரதம் மேற்கொண்டு நரசிம்மரை வழிபட்டு வந்தால் கூடுதல் பலன்களை பெறுவர்.
காலையும், இரவுமற்ற அந்தி பொழுதில் அவதரித்தவர் நரசிம்ம மூர்த்தி. அதனால் மாலை இருள் கவிழும் முன் அருகிலுள்ள நரசிம்மர் கோவிலுக்கு சென்று நரசிம்மருக்கு விருப்பமான சிவப்பு அரளி பூ, செம்பருத்தி பூக்களால் மாலை செய்து அணிவித்து, பானகத்தை நைவேத்தியமாக படைத்து நரசிம்மரை வழிபட்டால் சகல கஷ்டங்களையும் தவிடு பொடியாக்கி உடன் நின்று அருள் செய்வார்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே நரசிம்மரை வழிபட்டு, நரசிம்ம மந்திரத்தை 108 முறை சொல்லி செவ்வரளி, செம்பருத்தி, துளசி இலையால் நரசிம்மரை அர்ச்சனை செய்து வந்தால் காரிய சித்தி பெறலாம்.