108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசிமாதம் பௌர்ணமியன்று நடைபெறும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பெருமாள் பல்வேறு கோவில்களில் இருந்தும் 5 கருடசேவைகளில் ஒருநாளில் புரட்டாசி பௌர்ணமிக்கு கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு .
அந்த வகையில் இன்று நடைபெற்ற ஐந்து கருட சேவையில், கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து தங்கக்கருடவாகனத்தில் வியூக சுந்தரராசப்பெருமாளும்,
மற்றொரு கருடவாகனத்தில் கூடலழகரும் எழுந்தருளினர் .
இதே போன்று மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து வீரராகவப் பெருமாளும், வடக்குமாசிவீதியிலுள்ள வீரராகவப்பெருமாள் கோயிலில் உள்ள உற்சவரான ரெங்கநாதரும், மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பிலுள்ள மதனகோபாலசாமி கோயிலிலிருந்து மதனகோபால சாமியும் கருட வாகனத்தில் கூடலழகர் கோயில் முன்பு எழுந்தருளினர் .
தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையில் எழுந்தருளிய பெருமாளுக்கு மஹா தீபராதனை காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து ஐந்து கருட வாகனங்களில் பெருமாள் மாசிவீதிகளை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.