ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழேவைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்கக்கூடாது. பெற்ற விபூதி குங்கும பிரசாத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சந்நிதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபமேற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
அறுகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது. காளி, துர்க்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை.
அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
பரிகாரம் செய்தபின் பூஜைப் பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும்; சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்துவிடக்கூடாது.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்காக ஐந்து மூக்கு தீபம் ஏற்றவேண்டும். திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகர்த்துவது கூடாது.