மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது. இன்றுடன் ஒரு வாரமாக விரதம் இருந்த பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.
இன்று காலை சண்முகம், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானை தங்கமயில் வாகனத்தில் சிறிய தேரில் எழுந்தருளிய நிலையில், தேரை வடம் பிடித்து கிரிவல பாதை வழியாக பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக மூலவர் சுப்பிரமணியசாமிக்கு தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இன்று தங்களது விரதத்தை முடித்துக் கொண்டனர். திருப்பரங்குன்றத்தில் இன்று தேரோட்டம் நடைபெறுவதையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.