கேரள நாட்டின் எல்லையை ஒட்டி நெடுதுயர்ந்த மலைகளுக்கு இடையே அழகிய இயற்கைச் சூழிலில் பசுமையாய் பரவியிருக்கும் ஒரு சுற்றுலாத் தலம் வால்பாறை.
மலைச் சரிவுகளில் இயற்கையாய் அமைந்த படிக்கட்டுகளாய் அடர்த்தியாக பயிரிடப்பட்டிருக்கும் தேயிலைச் செடிகள், தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மலைகளை பசுமைப் போர்வையால் போர்த்தியிருப்பதைப் போல காட்சியளிக்கும்.
எங்கு பார்த்தாலும் தேயிலைத் தோட்டங்கள்தான், அதனால் எத்திசை நோக்கினும் பசுமைதான். எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கும் வால்பாறை, நீலகிரி மலைத் தொடரில் உள்ள கோத்தகிரியைப் போன்று உடல் நல தேற்றத்திற்கு ஏற்ற இடமாகும்.
வால்பாறைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் அதிக மதிப்புண்டு. இங்கிருந்து தெரியும் அக்காமலை, தங்கச்சி மலைகள் கண்ணிற்கு குளிர்ச்சியானவை.
இந்த மலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் அணில்கள் வித்தியாசமான நிறத்தில் மிக கவர்ச்சியாகக் காணப்படுகின்றன. செந்நிறம் கலந்த அழகுடன் திகழ்கின்றன. தனியாக பிரிந்து ஓடிவரும் மான் குட்டிகளை நிறையக் காணலாம்.
இங்குள்ள ஒரு உயர்ந்த இடத்தில் டாடா தேயிலை நிறுவனம் ஒரு பெருமாள் கோயிலை கட்டியுள்ளது. கோயிலும், அதைச் சுற்றியுள்ள இடமும் நேரத்தை கழிக்கத் தக்கவையாகும்.
இப்பகுதியில் பயணம் செல்லும் போது ஒரு சிறிய வகை அட்டை ஆங்காங்கு காணப்படும், இது மழைக் காலங்களில் அதிகமிருக்கும். அவைகள் நமது கால்களில் பற்றிக்கொண்டு நாம் அறியாத வகையில் இரத்தை உறிஞ்சி குடித்துவிடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யானை படையெடுப்பு அடிக்கடி நிகழக் கூடியது. அதேபோல எப்போதாவது ஒரு முறை சிறுத்தைகளும் வலம் வருவது உண்டு.
புறப்படுவோம் டாப் ஸ்லிப் நோக்கி...
ஓரிரு நாட்கள் தங்கியிருந்து வால்பாறை இயற்கைச் சூழலை அனுபவித்தப் பின்னர் அங்கிருந்து பொள்ளாச்சி நோக்கி இறங்குங்கள். 38 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட அழிகிய மலைப் பாதை. ஆபத்தை யோசிக்க வேண்டாம், இப்பகுதி ஓட்டுநர்கள் மிக சாமர்த்தியசாலிகள்.20
வளைவுகளைக் கடந்த பிறகு உங்களின் பார்வைக்கு வருவது கீழே தெரியும் ஆழியாறு அணை. அற்புதமான இயற்கை சூழிலில் அமைநதுள்ள ஆழியாறு அணை, தென்மேற்குப் பருவ மழை பொழியத் தொடங்கியதும் நன்றாக நிரம்பத் துவங்கும். ஜூலைக்குப் பிறகு அணை முழு அளவிற்கு நிரம்பி பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்.
கொண்டை ஊசி வளைவுகள் முடிந்த பிறகு பொள்ளாச்சியை நெருங்கும் தருவாயில் உள்ளது குரங்கருவி. மங்க்கி ஃபால்ஸ் என்றே ஆங்கிலத்தில் முழங்குகின்றனர் அப்பகுதி மக்கள்.
ஒரு சிறிய நீர்வீழ்ச்சி இது. 20 பேர் வரை நெருக்கமாக நின்று குளிக்கலாம். சில்லென்ற நீர் உடலை உறுத்தாமல் விழும். குழந்தைகளிலிருந்து பெரியோர் வரை அச்சமின்றி ஆசை தீர நீராடலாம்.
அருவி விழுந்து செல்லும் இடத்தில் ஒரு குட்டை போல் நீர் தேங்கியிருக்கும். நல்ல நீரோட்டம் இருக்கும் போது அதில் இறங்கி (பாசி இருக்கும் பார்த்து இறங்க வேண்டும்) அமர்ந்து அனுபவிக்கலாம்.
அருவியில் குளித்து முடித்ததும் பசிக்குமே? கவலை வேண்டாம். காலை நேரமாக இருந்தாலும், மதியமாக இருந்தாலும், மாலைப் பொழுதாக ஆனாலும் எப்போதும் சிற்றுண்டி முதல் வயிறார சாப்பிட உணவுகளை அப்பகுதி வாழ் மக்கள் அருமையாக சமைத்து அங்கே கொண்டு வந்து விற்கின்றனர். சுவையாக இருக்கும். விலையும் குறைவு. குரங்கு தொல்லையும் உண்டு.
அங்கிருந்து புறப்படுங்கள் டாப் ஸ்லிப் நோக்கி. தென்னையால் நிரம்பி பசுமையாகக் காட்சி தரும் பொள்ளாச்சியின் இயற்கை எழிலை ரசித்துக் கொண்டே அந்நகரைக் கடந்து ஜமீன் ஊத்துக்குளி என்ற கிராமத்தைத் தாண்டி வேட்டைக்காரன் புதூரைக் கடந்து டாப் ஸ்லிப் செல்லும் மலைப் பாதையை அடையுங்கள்.
டாப் ஸ்லிப்பில் எல்லாவிதமான போதைப் பொருட்களும் தடை செய்யப்பட்ட பகுதியாகும். எனவே மலையேறுவதற்கு முன்னரே அங்குள்ள வன சோதனைச் சாவடியில் ஏதாவது நீங்கள் கொண்டு செல்ல முற்பட்டாலும் பறித்துக் கொள்வார்கள், ஜாக்கிரதை.
தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியில், இந்திரா காந்தி தேசியப் பூங்காவின் ஒரு அங்கமாக திகழும் டாப் ஸ்லிப் வனம் தமிழக வனத் துறையால் மிக அதிகமான கட்டுப்பாடுகளுடன் காப்பாற்றப்படும் உயிரியல் பூங்காவாகும்.
அரை மணி நேர பயணத்தில் டாப் ஸ்லிப்பை தொட்டுவிடலாம்.
அப்பகுதியை அடைந்ததுமே நம்மை வரவேற்கும் அழகிய புல்வெளி, அதில் ஆங்காங்கு கூட்டம் கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருக்கும் மான்கள். பறவைகளின் கீச்சுக் குரல் என்று ஒரு புதிய உலகத்திற்கு வந்த உணர்வு பிறக்கும்.
டாப் ஸ்லிப் பாதுகாக்கப்பட்ட வனம். அப்படிப்பட்ட டாப் ஸ்லிப்பைப் பற்றி வனப்பகுதி சுற்றுலாத் தலங்களில் விரைவில் காணலாம்.