Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொள்ளையடிக்கும் கொடைக்கானல்

Advertiesment
கொள்ளையடிக்கும் கொடைக்கானல்
, வியாழன், 14 ஜூலை 2011 (20:44 IST)
K. AYYANATHAN
கோடைக்காலம் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லை. புவி வெப்பமடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாமல் நிரூபிக்கிறது இரவில் வெட்கை. தப்பிச் சென்று 4 நாட்கள் கொடைக்கானல் குளிரில் நனைவோம் என்று முடிவுகட்டி குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்ற எங்களுக்கு அங்கே நடக்கும் கொள்ளையைக் கண்டதும் வெப்பமடித்தாலும் சென்னையே பரவாயில்லை என்று தோன்றியது.

கொடைரோடில் இருந்து மேலே செல்ல எவ்வளவு ஆகும் என்று தனியார் காரோட்டிகளைக் கேட்ட மாத்திரத்திலேயே, அந்த அதிகாலை நேரத்திலும் தலை சுற்றியது. ரூ.1,600 கொடுங்கள் என்று...ஏதோ ரூ.100 கேட்பது போல் மிகச் சாதாரணமாகக் கேட்டனர். மறுபேச்சு பேசாதது அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கியதும்... “ரிட்டன் போர வண்டியில் போறீங்களா? அதுல ரூ.800தான” என்று தொங்கினார் ஒரு காரோட்டி! அட, அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் காரில்தான் மேலே போகவேண்டும் என்று எங்களுக்கு என்ன பிரார்த்தனையா? உள்ளத்தில் எழுந்த வினாவுடன் பார்த்தேன். எதிரில் கொடைக்கானல் செல்லும் தனியார் பேருந்து நின்றுக்கொண்டிருந்தது. உடன் பொருட்களின் சுமைதான் காரை நாடச் செய்தது, அதைச் சற்றுச் சமாளித்து பேருந்திலேயே போய்விடுவோம் என்று ஓடிச் சென்று, கூட கொண்டு வந்த பெட்டிகளையும், பைகளையும் சுமைப் பகுதியில் அமுக்கித் திணித்து அக்காடா என்று அமர்ந்தோம்.

பெரிய மகிழ்ச்சிதான்... ரூ.120இல் கொடைக்கானல் போய்விடலாமே! லக்கேஜூக்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஆட்களை ஏற்றி, அள்ளித் திணித்துக்கொண்டு பேருந்து புறப்பட்டது. உடல் உராய்தல்களால் பேருந்துக்கு உள்ளே சந்தை லெவலுக்குச் சண்டை நடந்தது. அதனாலெல்லாம் எந்த பாதிப்பும் ஏற்படாத ஒரு யோக நிலையில் நடத்துனர் பயணச் சீட்டு வணிகத்தை பத்திரமாக நடத்திக் கொண்டிருந்தார்.
webdunia
K. AYYANATHAN

அழகிய மலைகளின் காட்சியை ஒரு பக்கம் மட்டுமே பார்க்க முடிந்தது. இடையில் திணிக்கப்பட்ட மக்கள் சுமையால் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. எனவே ஒரு பக்கத்து காலை நேர காட்சி கிடைக்காமல் போனது. அது காரில் கிடைத்திருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

இந்த மகிழ்ச்சி கொடைக்கானல் பேருந்து நிலையத்திற்குச் சென்றதும் மறைந்தது. உடன்பொருட்களை இறக்கு வைத்த உடனேயே வந்து சூழந்த சுற்றுலா நிறுவனங்களின் முகவர் கூட்டம், எங்கெங்கே போகப் போகிறீர்கள் என்பதை முடிவு செயதுக்கொண்டு அறை தேடப் புறப்படுங்கள் என்று அழுத்தமாக வலியுறுத்தியது. தங்குவதற்கு நல்ல இடம் தேட வேண்டுமே? துணை இல்லாமல் போனால் எப்படி? ஒரு முகவரிடம் சுற்றுலாவிற்கு ரூ.600 செலுத்துவதாக ஒப்புக்கொண்டு (அறை காட்டி, தங்கும் முடிவு எடுத்தவுடன் அந்தப் பணத்தை காரோட்டியிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நிர்பந்தம்) தங்குமிடம் பார்க்க புறப்பட்டோம்.

அறைக்கு கட்டணம் எவ்வளவு என்கிற அட்டை பல விடுதிகளில் இல்லை. கட்டணத்தையும் ஆயிரத்திற்குக் குறையாமல் கேட்டார்கள் (காட்டிய காரோட்டிக்கு தரகு கொடுக்க வேண்டுமே). ஒரு வழியாக நல்ல ஒரு விடுதியில் - சர்ச்சைக்குரிய பிளசண்ட் ஸ்டே விடுதி அருகேயிருந்தது - மலைகளின் எழில் தோற்றத்தை காணும் வகையில் அமைந்திருந்த அறையை நாளுக்கு ரூ.1,700க்கு எடுத்து தங்கினோம். சொன்னபடி ரூ.600 வாங்கிக்கொண்டு காரோட்டி புறப்பட்டார்.
webdunia
K. AYYANATHAN

குறி்ஞ்சியாண்டவர் கோயிலுக்கு முதலில் செல்வோம் என்று ஒரு காரை அணுகினோம். போய்விட்டு திரும்ப ரூ.300 ஆகும் என்றார்! எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்று கேட்டேன். 5 கி.மீட்டர் என்றார்! அதற்கா இவ்வளவு என்று கேட்டதற்கு, இங்கு அப்படித்தான் என்று அரசியல்வாதி ரேஞ்சுக்கு பதில் வந்தது. எல்லா காரோட்டிகள் ஒரு குரலில் பேசுகிறார்கள். போக ரூ.150 கொடுத்து கோயிலுக்கு போனோம்.

ஐந்து வீடு நீர் வீழ்ச்சி

குறிஞ்சியாண்டவர் கோயிலுக்குப் போய்விட்டுப் பிறகு செட்டியார் பூங்காவைச் சுற்றுவிட்டு விடுதிக்குத் திரும்ப வாகனம் கிட்டவில்லை! காலையில் நமக்கு ஆட்டை போட்ட அதே முகவரை வந்து கூட்டிச் செல்லுமாறு கேட்டேன்...ரூ.150 ஆகும் என்றார். மதிய உணவிற்கு கிளப் அஸ்டோரியா உணவு விடுதியில் இறக்கிவிட்ட அந்த முகவர், “நீங்கள் சாப்பிட்டு விட்டு வாருங்கள்... யாரும் பார்க்காத, இயற்கை எழில் கொஞ்சும் அருமையான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று ருசிகாட்டிவிட்டார்.

ரொம்ப நல்லவர் போல என்று நாங்களும் உணவை முடித்துக்கொண்டு வந்து அவரிடம் பேசும்போதுதான் அவர் பெரிய ஆட்டையை போடுவது தெரியாமல் பலி ஆடு கணக்காக தலையாட்டினேன். “அந்த இடம் ரொம்ப தூரத்தில் உள்ளது, சாலை நிலை மோசமாக இருக்கிறது, கொஞ்ச தூரம் டிரெக்கிங் (நடந்து) செல்ல வேண்டும், ஆனால் அபாரமாக இருக்கும்” என்று சித்தரித்ததும், நிச்சயம் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொடி கட்டிப் பறந்தது. ரூ.2,500 ஆகும் என்றார்! பேசிப்பார்த்தோம், குறைக்கவில்லை. சரி இதுதான் அதற்கான விலையாக இருக்கும் என்று நினைத்து ஒப்புக்கொண்டோம்.

கொடைக்கானல் நகரத்தில் இருந்து ஒரு 20 கி.மீ. தூரத்தில்தான் அந்த இடம் இருந்தது. ஒரு கால் மணி நேரம்தான் நடந்திருப்போம்... பெருமாள் மலையில் அந்த இடம் வந்தது. வெள்ளி அருவியில் இருந்து வரும் தண்ணிர் ஒரு ஓடையாகப் போய் அந்த மலைப்பகுதியில் நீர் வீழ்ச்சியாக கொட்டுகிறது. மிக அழகான, அதே நேரத்தில் ஆபத்தான காட்சியாக அந்த இடம் இருந்தது. ஐந்து வீடு நீர் வீழ்ச்சி என்று அதற்குப் பெயர். ஒரு நேரத்தில் அங்கு 5 வீடுகள்தான் இருந்ததாம், அதனால் அந்தப் பெயர்.
webdunia
K. AYYANATHAN

நீர் வரத்து அதிகம் இருக்கும் காலத்தில் அந்த இடத்திற்குப் போவது இயலாது. அந்த வனப் பகுதியில் பொழியும் மழையே கீழேயுள்ள பழநி நகருக்கு குடி நீர் ஆதாரமாக இருக்கிறது. அந்த நல்ல காட்சியைக் கண்டோம். அது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்து இடமாகத்தான் இருக்கிறது. எங்களைப் போல் பலரும் அங்கு வந்தனர். பொதுவாக மலைப் பகுதிகளில் நாம் காணும் காட்சிதான் அது.

ஆனால் நகரத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் என்பதால் அதனை சுற்றுலா அட்டவணையில் சேர்க்காமல், இப்படி ஏக பில்டப் கொடுத்து, ஏதும் அறியாத குடும்பத் தகப்பன் சாமிகளிடம் ஆட்டை போட்டு விடுகின்றனர். எனக்கு ஓட்டுனராக வந்தவர் நல்லவர். அவரிடம் இதற்காக நான் கொடுத்த கட்டணத்தைக் கூறினேன், அதிர்ச்சியைக் காட்டினார்... பதிலேதும் கூறவில்லை.

சீசன்ல தான சார் சம்பாதிக்க முடியும்

கொடைக்கானல் பற்றி விவரம் தெரியாமல் மலையேறினால் இப்படித்தான் ஏமாளி என்ற ‘பெருமை’ சுமக்க வேண்டும் என்பது புரிந்தது. ஏன் இப்படி ஆட்டைய போடுகிறீர்கள் என்று கேட்டால்... எல்லா திசையில் இருந்தும் ஒரு பதில்தான். அது, “சீசன்ல தான சார் சம்பாதிக்க முடியும்?என்று சொல்லி ஒரு பரிதாப பார்வை பார்க்கிறார்கள்.
webdunia
K. AYYANATHAN

கொடைக்கானலில் இருந்து மண்ணணூர் என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒரு ஏரி உள்ளது. அங்கு சென்று வர எப்படியும் ஐந்தாறு மணி நேரம் ஆகும். இடையில் எழில்மிகு பூம்பாறை கிராமம். சென்ற வர 80 கி.மீ. தூரம். இதற்கு வேரொரு காரோட்டி வாங்கியது ரூ.1,100தான். அந்த ஒரு நாள் மிக நன்றாக இருந்தது.

சுற்றுலா அட்டவணை அட்டையுடன் சிற்றுந்தில் பல இடங்களுக்குக் கூட்டிச் செல்லும் பயணத்தின் முடிவில் இந்த இடத்தில்தான் சாப்பிட வேண்டும் என்று நகருக்கு வெளியே வண்டியை நிறுத்திவிட்டு ஒரு அலம்பல் செய்கிறார் ஓட்டுனர். எல்லோரும் சேர்ந்து வேண்டவே வேண்டாம் என்றோம். கடுப்புடன் வண்டியை எடுத்தவர், இந்தக் கடையில் உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளுங்கள் குறைந்த விலை, நல்ல பொருள் என்றார். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றதும் சிடுசிடுத்த முகத்துடன் நகரத்திற்குக் கொண்டு வந்து இறக்க வேண்டிய இடத்தில் இறக்காமல், அங்கே வராது, இங்கே போகாது என்றெல்லாம் கடுப்படித்தார். சுற்றுலா பயணிகளும் அவர்களால் ஆன அர்ச்சனையை செய்துவிட்டு இறங்கிச் சென்றனர்.
webdunia
K. AYYANATHAN

கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் கிடைக்கும் பழங்கள் முன்பெல்லாம் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும், அந்த நிலை மாறிவிட்டது. அங்கும் கொள்ளையே. எல்லாவற்றிற்கும் ஒரே பதில்...சீசன்ல தான சார்.......
கொடைக்கானலுக்கும் போகனும், நமது வசதிக்கு உட்பட்டும் பார்க்கனும், என்ன செய்ய?

நம்ம புத்திக்கு எட்டிய வழி இது: 10 முதல் 12 நண்பர்களுடன் அல்லது இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு, டிராக்ஸ் போன்ற வசதியான சிற்றுந்தை வாடைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். ஓட்டுநருக்கு ஒரு முறையாவது கொடைக்கானல் அனுபவம் இருக்க வேண்டும்.

இப்படி கும்பலாக சென்றால், குடும்ப தங்குமிடங்கள் எல்லா விடுதிகளிலும் உள்ளது. அவைகள் மிகவும் கட்டுப்படியாகக் கூடியவை.

கொடைக்கானல் சுற்றுலா என்பது 2 நாட்களுக்கு மேல் ஒன்றும் கிடையாது. ஓய்வாக சுற்றிவர மேலும் ஒரு நாள் இருக்கலாம். 3வது நாள் மாலை அங்கிருந்து மூட்டையைக் கட்டிக்கொண்டு இறங்கிவிடலாம். பழிநி பக்கம் இறங்கினால் முருகன் தரிசனம். கொடை ரோடு பக்கம் இருங்கினால் மதுரை மீனாட்சியம்மன் தரிசனம். போதாதா என்ன?

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil