அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்திற்கு வெளியேயும் பல சிறந்த அருவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று பாபநாசம் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள அகத்தியர் அருவி.
பாபநாசம் அணைக்குச் சென்று, அந்த அணை நீரைக் கடந்து சென்றுக் காணும் பானதீர்த்தம் அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், அதற்குச் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மலைப்பகுதியில் உள்ள அகத்தியர் அருவிக்கும் செல்வர்.
மலைகள் சூழ்ந்திருக்க ஒரு அருமையான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த அருவி சிறியதாக இருந்தாலும், குற்றாலத்தைப் போல இந்த அருவியில் விழும் தண்ணிரும் உடல் நலத்திற்கு வலிமை சேர்ப்பதாகும். இதனை குடும்ப அருவி என்று கூட அழைக்கலாம். அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர் இதமாக விழுவதால், சிறுவர்களைக் கூட அழைத்துச் சென்று ஆனந்தமாகக் குளிக்கலாம். ஆனால் இங்கு வரும் பலரும் இந்த நீரின் இயற்கை தன்மை அறியாமல் குளியல் சோப்புப் போட்டு குளித்து அந்த இடத்தையே ‘மணக்கயச் செய்கின்றனர். இதனால் அந்த அருவி இருக்குமிடச் சூழல் மிகவும் கெட்டுள்ளது. சோப்பு நுரையும், உடல் அழுக்கும், சோப்புக் காகிதங்களும் சேர்ந்த அந்நீரை மாசுப்படுத்துகின்றன.
இந்த அருவியின் ஒரு பகுதி நீர் வந்து நிரம்பும் குளம் ஒன்று அருகில் உள்ளது. இதில் மிகவும் வளர்ந்த மீன்கள் நீந்தி விளையாடுவதை பார்த்துக் கொண்டேயிருக்கலாம். மாலையில் சென்று பொழுதைக் கழிக்க ஏற்ற இடமிது. அருவியில் சுகமாக நீராட விரும்புவோர் அதிகாலை நேரத்தில் இங்கு சென்று நீராடலாம். அகத்தியர் அருவி இருக்குமிடமும் களக்காடு - முண்டன்துறை புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதி என்பதால் இருட்டுவதற்கு முன்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிடுவது பாதுகாப்பானதாகும்.