பான தீர்த்தம் நீர் வீழ்ச்சி
, சனி, 4 ஜூலை 2009 (13:18 IST)
மராட்டியத்திலிருந்து தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் வரை பெரும் சுவர் போல் உள்ள மேற்கு மலைத் தொடர்ச்சியின் இறுதிப் பகுதியாக உள்ள பொதிகை மலைத் தொடரை மலைகளின் மகாராணி என்று அழைத்தால் பொருந்தும். பசுமை போர்த்திய எழிலும், எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் இதமான குளிர்க் காற்றும், பறவைகளின் இசையும் மனதிற்கு ஆனந்தத்தை தருவனவாக உள்ளன.தமிழரின் இலக்கியத்தில் பெருமையாகப் பேசப்படும் பொதிகை மலையில் இருந்து உருவாகித்தான் நெல்லைப் பெருநிலத்தை வளமாக்கி வருகிறது என்றும் வற்றா சீவ நதியான தாமிரவருணி, பெருணை நதி என்றெல்லாம் அழைக்கப்படும் தாமிரபரணியாகும்.பொதிகை மலையில் இந்நதியின் பிறப்பிடம் இன்று வரை யாரும் அறியாதது என்று கூறப்படுகிறது. ஆனால் மலையில் தவழ்ந்து, ஆல மர விழுதுபோல் விழும் காட்சியை பாபநாசம் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து பார்க்கலாம். இந்தக் காட்சியைத்தான் பான தீர்த்தம், அதாவது வானத்தில் இருந்து பொழியும் தீர்த்தமாக பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
பொதிகை மலைத் தொடரில் பொழியும் மழையால் நிரம்பும் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது பாபநாசம் அணை. இந்த அணையைக் கடந்துதான் பான தீர்த்தம் செல்ல வேண்டும். அணையைக் கடப்பதற்கு அங்கே ஏராளமான விசைப் படகுகள் உள்ளன. ஒருவருக்கு ரூ.30 வீதம் பயணச் சீட்டுப் பெற்றுக் கொண்டு பாபாநாசம் அணைப் பகுதியைக் கடக்க வேண்டும். இந்த படகுப் பயணம் பாதுகாப்பானது. அணையின் நீர்ப் பகுதியில் பயணித்து மலை அடிவாரத்தை நெருங்கும் போது இரண்டு மலைகளுக்கு இடையே பெரும் நீர் வீழ்ச்சியாய் பான தீர்த்தம் தெரியும்.அணையின் மறுகரையில் இறங்கி, மலைப் பாதையில் நடந்து மேலே சென்று அருவியில் குளிக்கலாம். அருவியில் அதிகம் தண்ணீர் வரும்போது அது சற்றுத் தூரச் சென்று விழும் இடத்தில் கிணறு போன்று நீர் தேங்கியிருக்கக் காணலாம். இதில் குதித்து விளையாடுவது ஆபத்தானது. நீர் சுழற்சி உள்ளதால் குதித்தால் வெளியேறுவது இயலாதது. இதில் குதித்து நீந்தச் சென்ற பலரும் உயிரிழந்திருக்கின்றனர் என்று படகோட்டிகள் கூறுகின்றனர்.
எனவே, அருவியில் மட்டும் பாதுகாப்பாக குளித்துவிட்டு வருவது நன்று, உடலிற்கு நன்மை பயப்பது. குளிக்க வருவோரை காவல் துறையினர் கட்டுப்படுத்தி நீராட அனுமதிக்கின்றனர். மாலை 4 மணிக்குள் அருவியை அடைய வேண்டும். அதற்குப் பிறகு படகில் சென்று பான தீர்த்தம் அருவியை படகில் இருந்தபடியே மட்டும் பார்த்து விட்டு வர அனுமதிக்கிறார்கள்.பாபநாசம் நகரில் இருந்து மலைப் பாதையில் (இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். களக்காடு - முண்டன்துறை புலிகள் சரணாயத்திற்கு உட்பட்டப் பகுதி) 12 கி.மீ. பயணத்தில் பாபநாசம் அணையை அடையலாம். பாபநாசம் அணையின் உயரம் 150 அடி. 144 அடி வரை நீர் தேக்கும் கொள்திறன் கொண்டது இந்த அணை.
இந்த அணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர் (தாமிரபரணியில்) திறந்துவிடப்பட்டு அது மலையின் கீழ்ப் பகுதியில் கட்டப்பட்டுள்ள நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
சுற்றுலாவிற்கு உகந்த பருவம்: ஜூலை முதல் செப்டம்பர் வரை.