பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவது நல்லது ஏன்?
பசியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம். பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. நேரத்துக்குச் சாப்பிட வேண்டாம். எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில், வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும்.
அந்த நேரத்தில் சாப்பிட்டால்தான், உணவு முழுமையாக செரிமானமாகி சத்துகளை உடல் கிரகிக்க முடியும். பசி உணர்வு இல்லாதபோது சாப்பிட்டால் இந்தச் செயல்பாடு முறையாக நடக்காது. எனவே, நேரத்துக்குச் சாப்பிடுவதை விட, பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவதே நல்லது.
எப்போது நமக்குப் பசி வந்து, சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ அப்போதே செரிமானத்துக்கான பணிகள் ஆரம்பித்துவிடும். அதாவது, என்ன சாப்பிடப் போகிறோம் என்று திட்டமிடுவதில் தொடங்கி, அந்த உணவைப் பார்ப்பது, நுகர்வது, சுவைப்பது என உணவு வயிற்றுக்குள் போகும் முன்னரே அந்த உணவின் இலகுவான தன்மையைப் பொறுத்து செரிமானத்துக்கு உடல் தயாராகிவிடும்.
உடல் அமைப்புக்கும் உணவின் அளவுக்கும் சம்பந்தமில்லை. ஒருவர், தொடர்ச்சியாக அதிகம் சாப்பிட்டு வந்தால், நாளடைவில் இரைப்பையின் அளவு, தானாகப் பெரிதாகி விடும். அதற்கேற்றார்போல் பசியும் உணவின் அளவும் அதிகரித்து விடும்.
தூக்கத்துக்கும் உண்ணும் உணவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. போதுமான அளவு தூங்காதவர்கள் அதிகமாகச் சாப்பிடுவார்கள். எனவே, போதுமான அளவுக்குத் தூங்குங்கள். உங்களை அறியாமலேயே நீங்கள் சரியான அளவில் உண்ணத் தொடங்கி விடுவீர்கள்.
வயிறு நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். நீங்களாகப் பார்த்து, முதல்முறை தட்டில் எடுத்து வைத்துக்கொண்ட உணவே உங்களின் தேவைக்கான சரியான அளவு. எனவே, தட்டு நிறையச் சாப்பிட்டபிறகு, மீண்டும் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இது உடல் பருமனாவதில் இருந்து தப்ப உதவும்.
அடுத்த கட்டுரையில்