சமீபத்தில், சர்வதேச விஞ்ஞானிகள் நடனம் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி கொண்டதாக இருக்க முடியுமா? என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் நடனத்தின் மூலம் மன உறுதி அதிகரிக்கக்கூடும் என்றும் கண்டறிந்துள்ளனர். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைப்பதில் நடனம் மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது.
நடனத்தால் மன நலம், மன உறுதிக்கு மட்டுமின்றி, மனச் சுறுசுறுப்பும் அதிகரிக்கிறது. நடனக் கலைஞர்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் மேம்படுகிறது. மேலும், ஆக்ஸிடாசின், எண்டோர்பின் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியாகி, மன அழுத்தம், பயம், சோர்வு, பதற்றம் போன்றவற்றைக் குறைக்கின்றன.
நடனம், கார்டிசோல் எனும் ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவித்து, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதன் மூலம் உடலின் இயற்கையான மன அழுத்தக் கட்டுப்பாட்டு முறைகள் மேம்படுகின்றன. தினசரி வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்க நடனம் ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
மற்ற உடற்பயிற்சிகளுக்கு மாறாக, நடனம் இசை, தாளம், ஒழுங்கான அசைவுகளை உள்ளடக்கியது. இதில் பயன்படுத்தப்படும் நடைமுறைகள் மாறிக்கொண்டே இருக்கும், அவற்றை மனதில் பதிந்து, சரியான முறையில் செயல்படுத்துதல் முக்கியம்.
மூளை செயல்பாட்டை மேம்படுத்தும் ஒரு பயிற்சியாகவும் நடனம் கருதப்படுகிறது. இந்த காரணத்தால் சமூக சுகாதாரத் திட்டங்களில் நடனத்தை சேர்க்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர். ஆராய்ச்சிகளின்படி, நடனம் மூலம் செரோடோனின் என்ற ஹார்மோனின் அளவு உயர்ந்து, மனநிலை உற்சாகமாக இருக்கும். மேலும், உடலின் அனைத்து தசைகளையும் ஈடுபடுத்தி, உடல் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.