உடம்பில், குறிப்பாக முகம், கை, கால்களில் தோன்றும் மருக்கள் சிலருக்கு பெரிய சங்கடமாக இருக்கும். அவற்றை நீக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், வலிக்கு அஞ்சி பலர் அந்த முயற்சியைக் கைவிடுவதுண்டு. ஆனால், வீட்டில் இருக்கும் சில எளிமையான பொருட்களை கொண்டே இந்த மருக்களை இயற்கையான முறையில் நீக்க முடியும்.
மருக்களைப் போக்கும் அற்புதப் பொருட்கள்
பூண்டு: மருக்களுக்கு எதிராகப் போராடும் அல்லிசின் என்ற பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. தினமும் பூண்டு சாற்றை மருக்களின் மீது தடவி வந்தால், படிப்படியாக மருக்கள் உதிர்ந்துவிடும்.
அன்னாசி: அன்னாசிப் பழத்தில் உள்ள என்சைம்கள் மருக்களைக் கரைத்து அழிக்கும் தன்மை கொண்டவை. அன்னாசிப் பழச்சாற்றை பிழிந்து, சில வாரங்களுக்குத் தொடர்ந்து மருக்களின் மீது தடவி வரலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர்: மருக்களை வேரோடு அகற்ற ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு காட்டன் பஞ்சு அல்லது சுத்தமான துணியில் ஆப்பிள் சைடர் வினிகரை நனைத்து, மருக்களின் மீது ஒரு நாளைக்கு மூன்று முறை வைக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வர, மருக்கள் முதலில் கருமை நிறமாக மாறி, பிறகு அதைச் சுற்றியுள்ள தோல் காய்ந்து, மருக்கள் வேரோடு விழுந்துவிடும்.
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு: உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை மருக்களின் மீது தேய்ப்பதன் மூலம் அவை நாளடைவில் உதிர்ந்துவிடும். குறிப்பாக, உருளைக்கிழங்கு சாற்றை இரவில் மருக்களின் மீது தடவி, மறுநாள் காலையில் கழுவினால் அதன் வீரியம் அதிகமாக இருக்கும்.
வெங்காயம் மற்றும் கற்றாழை: வெங்காயத்தின் மீது உப்பு தடவி, அதன் சாற்றை மருக்கள் மீது தடவி வரலாம். இதேபோல், கற்றாழை ஜெல்லையும் மரு உள்ள இடத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் நாளடைவில் மருக்கள் உதிர்ந்துவிடும்.
சாலிசிலிக் அமிலம் போன்ற சில இயற்கைப்பொருட்கள் மருக்களைப் போக்க உதவினாலும், அவை தோல் எரிச்சல், சிவத்தல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, இவற்றை முறையாக சரும மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.