Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

Mahendran

, வியாழன், 26 டிசம்பர் 2024 (18:45 IST)
மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு இ-கோலி பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா்.
 
'இ-கோலி' எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று ஆகும்.  ‘எஸ்கெரிச்சியா கோலி’ எனப்படும் 'இ-கோலி'  அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீா், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேகவைக்காமலும் அவற்றை உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
 
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறாவிடில், ஒரு கட்டத்தில் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும்.
 
இது தொடர்பாக பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
 
மழை வெள்ள காலங்களில் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. அதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
 
அதன் தொடர்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாசுபட்ட குடிநீா், உணவுகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மழை பாதித்த பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்த விவரங்களை பொதுச் சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
மழைக் காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.
  
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?