வெயில் , வெப்பம் , ஈரப்பதமான வெப்பம் போன்ற காலநிலையின் காரணமாக படர்தாமரை நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
உடலில் இறுக்கமான ஆடைகள் அணிவதால் இந்த வெயில் காலத்தில் பலருக்கு படர்தாமரை பாதிப்பு ஏற்படுகிறது.
தோல் நோய் துறை தலைவர் மருத்துவர் தனலட்சுமி இதுபற்றி கூறுகையில், தோல் பிரச்சினை சம்பந்தமாக வருபவர்களில் 20 சதவீதம் பேர், படர்தாமரை பிரச்சினைக்காவே வருகிறார்கள். வாரம், வாரம் வந்து நோயாளிகள் மருந்து வாங்கி போடவேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் வாரம், வாரம் பரிசோதனை செய்வார்கள். படர்தாமரை போன பின்பும் மறுபடியும் இரண்டு வாரம் மருந்து கொடுப்பார்கள். விட்டுப்போன கிருமிகள் தொடர்ந்து வளர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவர்கள் சொல்லும் வரை மருந்து போட வேண்டும். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வாமை நோய்க்கு பயன்படுத்தக்கூடிய ஸ்டிராய்டு எனும் களிம்பை மருந்துக்கடைகளில் வாங்கி சுயமாக பயன்படுத்தக்கூடாது. அப்படி செய்தால் தோலில் தேய்மானம் ஏற்பட்டு இரத்தக் குழாயின் அடிப்பகுதி தெரியும் அளவுக்கு மாற்று நோயை உருவாக்குகிறது. தற்போது தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இவ்வாறு மருத்துவர் தனலட்சுமி தெரிவித்தார்.