Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடை நோய்களிலிருந்து தப்பிப்பது எவ்வாறு?

கோடை நோய்களிலிருந்து தப்பிப்பது எவ்வாறு?

கோடை நோய்களிலிருந்து தப்பிப்பது எவ்வாறு?
அக்னி வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது.  ஒவ்வொரு பருவநிலைக்கும் அதற்குரிய நோய்கள் நம்மைத் தாக்கும்.


 


அப்படி வெயிலுக்கே உரிய நோய்களான வியர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச்சல் என பலவும் நம்மைத் தாக்கக் காத்திருக்கின்றன.
 
சின்னம்மை
 
இந்தக் கோடையில் சில நோய்க்கிருமிகள் அதிக ஆற்றலுடன் செயல்படும். அவற்றில் முதன்மையானது, சிக்கன்பாக்ஸ் என்று சொல்லக்கூடிய சின்னம்மை. இதை உருவாக்கும் கிருமி, நம் உடலில் விரைவாக தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. 
 
கோடைகாலத்தில் இன்னும் வீரியமாகச் செயலாற்றும். வெளியில் வேலை செய்பவர்களுக்கும், டூ வீலரில் அலைபவர்களுக்கும் எளிதில் தொற்றும். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, தூசு மற்றும் புகை மண்டலம் வழியாக எளிதாக மற்றவர்களுக்கும் பரவிவிடும். உடம்பில் நீர்ச்சத்துக் குறைந்தாலும் சின்னம்மை ஏற்படும்.
 
இதற்கான அறிகுறிகள்... அதிக ஜுரம், பின் கழுத்து, முதுகு, கை போன்ற இடங்களில் சிறுசிறு கொப்புளங்கள். இந்த கொப்புளங்களைக் கிள்ளக்கூடாது. இவை, ஒரு வாரத்தில் தாமாகவே மறைந்துவிடும். முன்னோர் சொன்னபடி, வேப்பிலைகளை விரித்து அதன்மீது படுப்பது, வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரில் குளிப்பது, வேப்பங்கொழுந்தை அரைத்துக் குடிப்பது போன்றவற்றை கடைபிடித்தால்... கொப்புளங்களால் ஏற்படக்கூடிய அரிப்பு நீங்கும். அதிகப்படியான அரிப்போ அல்லது அதிக காய்ச்சலோ இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
 
எண்ணெய் சேர்த்த உணவுகள், அசைவ உணவுகளுக்கு முற்றிலும் தடை போடுங்கள். ஆவியில் வேகவைத்த காய்கறிகள், இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகள், பழங்கள், மோர், இளநீர், தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
கோடைக்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல்
 
மற்ற பருவ நாட்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலில் இருந்து மாறுபட்டது, கோடை கால காய்ச்சல். இதை உருவாக்கும் வைரஸ்கள், கோடையில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். 
 
சுற்றுச்சூழல் மூலமாகவும், பகலில் அதிக வெப்பம், மாலையில் அதிக குளிர் போன்ற சீதோஷ்ண மாற்றத்தாலும் இவை பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வியர்வை காரணமாக வரும் ஜலதோஷம் பிடிப்பது வழக்கமே. குறிப்பாக, தலைப்பகுதியில் ஏற்படும் வியர்வையின் ஈரம் காரணமாகவே இந்தத் தொல்லை. எனவே, வியர்வையை துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
 
வியர்க்குரு, வேனல் கட்டிகள்
 
உடம்பின் வெப்பநிலை அதிகரிப்பதால், உடலில் உள்ள நீர்ச்சத்து, விரைவாகக் குறைந்து வற்றிவிடும். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, அவை உடம்பில் வேனல் கட்டிகளையும் முகத்தில் பருக்களையும் ஏற்படுத்தும். இவை அதிக வலி தருவதாக இருக்கும். அளவில் சிறிய கட்டிகளாக இருந்தால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடும். சீழ்பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால், மருத்துவரிடம் செல்லவேண்டும். இந்தக் கட்டிகளை கையால் தொடவோ... கிள்ளவோ கூடாது. இதன் சீழ் மற்ற இடங்களில் பட்டால், அங்கேயும் கட்டிகள் தோன்ற வாய்ப்புகள் அதிகம்.
 
வியர்வை உடம்பில் தங்குவதால் வியர்க்குரு ஏற்படுகிறது. ஆகையால், வியர்வையை உடம்பில் தங்க விடாதபடி முகத்தை வெறும் நீரால் கழுவுவது, உடம்பை ஈரமான துணியால் துடைத்துக் கொள்வது, தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது.
 
சருமப் பிரச்னைகள்
 
இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தேங்கி... படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் (படர்தாமரை பரவும் இடங்களில் தோல் வீங்கி சிவப்பது) போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக தூசு, வெப்பம் கலந்த காற்று காரணமாகவும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும்.

உடலை மறைக்கும் பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகுதிகளை கையால் தொந்தரவு செய்யாமல் இருப்பது, முடிந்தவரை உடலைத் தூய்மையாக வைத்திருப்பது, படர்தாமரைக்கான க்ரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு தடவுவது ஆகியவற்றை மேற்கொண்டாலே... பிரச்னை தீர்ந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil