சூரிய நமஸ்காரம் என்பது காலம்காலமாக இந்து மத வாழ்வியல் அடிப்படைகளில் ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சூரிய நமஸ்காரம் ஆகமங்களுக்காக மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகளை தரக்கூடியது.
இந்து மத சாஸ்திரங்களில் சூரியன் கடவுளாக வணங்கப்படுகிறார். சூரிய பகவான் தகிக்கும் உஷ்ணத்தை கொண்டவரானாலும் உலகில் உயிர்கள் தழைத்தோங்க தேவையான அளவு ஒளியை, வெப்பத்தை தந்து உலகை காக்கிறார். பிரபஞ்சம் உருவான நாள் தொட்டு தேவர்கள் வணங்கும் தெய்வமாக சூரிய பகவான் அருள்கிறார்.
காலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய கதிர்களில் உஷ்ணம் குறைவாக இருப்பதுடன், அறிவியல்ரீதியாக உடலுக்கு தேவையான விட்டமின் உள்ளிட்ட சத்துக்களை சூரிய ஒளியிலிருந்து பெற முடியும். அதனால்தான் விடியற்காலையில் ஸ்நானம் செய்து வெறும் உடம்பில் சூரிய நமஸ்காரம் செய்வது ஒரு பழக்கமாக உள்ளது.
வெறும் உடலில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது சூரிய கதிர்கள் உடல் முழுவதும் பரவுகிறது. இதனால் சூரியனிலிருந்து தேவையான ஆற்றலை உடல் கிரஹித்துக் கொள்வதுடன், தோல் மேல் உள்ள கிருமிகளும் அழிந்து ஆரோக்கியமான நாளுக்கு வழி கொடுக்கிறது.
அதிகாலை சூரியனை பார்த்து ஒற்றை காலை உயர்த்து மறுகாலின் மூட்டின் பக்கவாட்டில் நிலை நிறுத்தி, இரண்டு கைகளையும் உயர கூப்பி வணங்கி கண்களை மூடி தியானித்து சூரிய நமஸ்காரத்தை மேற்கொள்ள வேண்டும். சூரியனின் வெம்மையை உடலில் உணர்ந்து வேறு எதையும் சிந்திக்காத தியான தன்மையில் இருத்தல் வேண்டும்.
அவ்வாறு சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சுறுசுறுப்படைகிறது. தியானம் செய்த மன அமைதியை கிடைக்க செய்கிறது. இப்படியாக பல வகையான நன்மைகளை முறையாக செய்யக்கூடிய சில நிமிட சூர்ய நமஸ்காரம் கொண்டுள்ளது.