Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணிய பாரதியின் பங்கு....

Advertiesment
சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணிய பாரதியின் பங்கு....
, திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (18:49 IST)
இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு மிகவும் முக்கியமானது. 


 

 
சுப்பிரமணிய பாரதி ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். அதோடு, பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் அவர் விளங்கினார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” இவர் போற்றப்பட்டார். அதுபோன்ற,  மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..
 
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் டிசம்பர் மாதம் 11ம் தேதி, 1882ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் பாரதி. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவர் சிறுவயதிலேயே தமிழ் புலைமையோடு காணப்பட்டார்.
 
தமிழ் மொழியின் மீது அவருக்கு அப்படி ஒரு காதல் இருந்தது. அதனால்தான். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். பதினொரு வயதிலேயே கவிபாடும் ஆற்றலோடு விளங்கினார். அவரின் கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் பாரதி எனவே பெரும்பாலானோரால் அழைக்கப்பட்டார். சிலர் அவரை சுப்பிரமணிய பாரதி என அழைத்தனர்.
 
1897ம் ஆண்டு செல்லம்மாவை கரம் பிடித்த பாரதி வறுமையிலும், அவர் தன்னுடைய தமிழ் பற்றை விடவில்லை. அதனால் மீசை கவிஞன் எனவும் முண்டாசு கவிஞன் எனவும் அவர் அழைக்கப்பட்டார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் புலமை பெற்றிருந்தார்.  அவர் எழுதிய கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற காவியங்களை எழுதியுள்ளார்.

webdunia

 

 
சுதந்திர போராட்ட தீ அவருக்குள் காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் பற்றி எரிந்தது. அதை தனது பத்திரிக்கை, இலக்கியம், பாட்டு, கவிதை வடிவில் விடுதலை உணர்வை அவர் மக்களிடையே ஏற்படுத்தினார். அவரின் எழுச்சி வரிகளுக்கு தமிழகத்தில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சியினர் அவரின் இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது. அதேபோல், பாரதியை கைது செய்து சிறையிலும் அடைத்தது. ஆனாலும், எதற்கும் அஞ்சாமல் அவர் தொடர்ந்து சுதந்திர உணர்வுகளை தனது படைப்புகள் மூலம் மக்களிடையே அவர் பரப்பி வந்தார்.
 
1921ம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி  கோவிலில் உள்ள யானையால் தூக்கி எறியப்பட்டு நோய்வாய்பட்ட அவர், 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி தனது 39வது வயதில் மரணமடைந்தார்.
 
அவர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் மக்களிடையே இன்னும் எழுச்சியான உணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்கி கிடக்கும் சீன ராணுவம்; எச்சரித்த பத்திரிகை