இந்தியாவின் விடுதலைக்கு அஹிம்சை வழி போராட்டங்களால் வித்திட்டவர் மகாத்மா காந்தியடிகள்.
இந்திய விடுதலைக்காக ஜெய் ஹிந்த் என்று குரலெழுப்பியவர்களை அடித்து, உதைத்து, சிறையில் அடைத்தும், வந்தே மாதரம் என்று முழங்கியவர்களை துப்பாக்கி ஏந்திய தனது முரட்டுக் கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்கள், மகாத்மா காந்தி கையாண்ட சாத்வீக போராட்டத்தினைக் கண்டு மிரண்டனர். காரணம், மகாத்மா காந்தியடிகள் இந்தியாவின் மனசாட்சியாகத் திகழ்ந்தார்.
அவருடைய ஒவ்வொரு கோரிக்கையும் இந்திய மக்களின் விடுதலை உணர்வுகளில் இருந்து உயிர்கொண்டு எழுபவை என்பதனை வெள்ளைய ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
தனது உடலை வருத்தி மகாத்மா கடைபிடித்த உண்ணாவிரதப் போர், வெள்ளையர்கள் வித்திட்டு நம்மிடையே வேரூண்றிவிட்ட மத வெறுப்புணர்ச்சி காரணமாக எழுந்த வகுப்பு மோதல்களையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவந்தது.
பாரத நாடு இந்தியா - பாகிஸ்தான் என்று இருவேறு நாடுகளாக கூறுபோடப்பட்டபோது உருவான மதக் கலவரத்தை ராணுவத்தாலோ, காவல் துறையினராலோ அடக்க முடியவில்லை. ஆனால் மகாத்மாவின் உண்ணா நோன்பு வாயிலாக விடுத்த அமைதி செய்தி ரத்த வெறியில் திளைத்த மக்களின் உணர்வுகளை சமாதானத்தை நோக்கித் தட்டி எழுப்பியது.
கிழக்கே நவகாளியில் நடந்த மதப் படுகொலைகளையும், மேற்கே பஞ்சாப் பகுதியில் நடந்த மத வெறியாட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.
தனது சாத்வீகப் போராட்டத்தை விடுதலைக்கான ஆயுதமாக மட்டுமே காந்தி பயன்படுத்தி நிறுத்திக் கொள்ளவில்லை.
பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 55 கோடி ரூபாயை பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை கொடுக்க மறுத்த போது, மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார்.
பிரிவினையை மகாத்மா காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பிரிவினையை ஏற்றுக் கொண்டவர்களை அதற்குரிய நியாயமான நடைமுறைகளை தனது சாத்வீக போராட்டத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளச் செய்தார் மகாத்மா.
ஆனால் காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரானதாகவும், முஸ்லீம்களுக்கு ஆதரவானதாகவும் இருப்பதாகவே கருதிய இந்துமத தீவிரவாதிகள் காந்தியைச் சுட்டுக் கொன்றனர்.
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று வரை, இரு நாடுகளிலும் ஆங்காங்கு நடந்துகொண்டிருந்த மத வன்முறை, அவருடைய முடிவுச் செய்திக்குப் பின் முற்றிலுமாக நின்றது.
மதவெறிக்கு இரையாகி உயிரைத் துறந்த காந்தி, தனது மரணத்தின் வாயிலாக மத வண்முறைக்கு முடிவு கட்டினார். தான் வாழ்ந்து கண்டிருக்கவேண்டிய சமாதானத்தைத் தனது சாத்வீக கொள்கைகளுக்கு செவி மடுக்காத மக்களிடையே - தனது இன்னுயிரை ஈந்து ஏற்படுத்தினார் காந்தி மகாத்மா!
எனவே, வருகிற ஆக்ஸ்டு 15ம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர நாளில் மகாத்மாவை நினைவு கொள்வோம்.