Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாபம் தரும் தபால் அலுவலக 9 சிறப்பு சேமிப்பு திட்டங்கள்

லாபம் தரும் தபால் அலுவலக 9 சிறப்பு சேமிப்பு திட்டங்கள்
, செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (12:26 IST)
தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வது என்பது மிகவும் நம்பிக்கைக்கு உரியது. அஞ்சல் அலுவலகங்களில் 9 சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. 


 
 
இத்திட்டங்களில் சேமிப்பு கணக்கை வைத்திருப்பது மற்றும் முதலீடு செய்வதன் மூலம் குறைந்தது 4 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 8.10 சதவீதம் வரை லாபம் பெறலாம்.
 
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு:
 
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்பது வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கைப் போன்றதே. இந்தக் கணக்கை துவங்கக் குறைந்தபட்சம் 20 ரூபாய் கணக்கில் வைப்புத் தொகையாக இருக்க வேண்டும். தனிநபர் மற்றும் கூட்டு கணக்குகளாகவும் இந்தக் கணக்கை திறந்து கொள்ளலாம். 
 
இந்தக் கணக்கில் சேமிக்கும் தொகைக்கு வருடத்திற்கு 4 சதவீதம் வரை லாபம் உண்டு. 500 ரூபாய் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக வைத்து கணக்கை துவங்குபவர்களுக்கு செக் புக் அம்சமும் அளிக்கப்படுகிறது. 
 
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் 10,000 ரூபாய் வரையிலான லாபத்திற்கு 2012-2013 நிதி ஆண்டு முதல் வருமான வரி செலுத்த தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
5 வருட அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டம்:
 
இத்திட்டத்தில் முதலீடு செய்தால் 2016 ஏப்ரல் மாதம் முதல் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 7.4 சதவீதம் வரை லாபம் பெறலாம். தொடர் வைப்பு நிதி திட்டமான இதில் குறைந்தது மாதம் 10 ரூபாய் முதல் முதலீடு செய்துவரலாம். மாதம் 10 ரூபாய் விதம் ஐந்து வருடம் வரை முதலீடு செய்துவரும் 600 ரூபாய்க்கு முதிர்ச்சித் தொகையாக 726.97 ரூபாய் பெறலாம்.
 
தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு:
 
தபால் அலுவலக நேர வைப்பு கணக்கில் குறைந்தது 200 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி காலாண்டு வாரியாக கணக்கிடப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும். 
 
1 வருடம் முதலீடு செய்பவர்களுக்கு 7.1 சதவீத லாபமும், 2 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.2 சதவீதம் வரை லாபமும், 3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.4 சதவீதம் வரை லாபமும், 5 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.9 சதவீதம் வரை வட்டியும் லாபமாகப் பெறலாம்.
 
தபால் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு (MIS):
 
தபால் அலுவலகத்தின் மாத வருமான திட்ட கணக்கின் மூலம் முதலீடு செய்யும் போது மாதந்தோறும் செலுத்தி வரும் தொகைக்கு 7.80 சதவீதம் வரை லாபம் பெறலாம். 
 
இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது தனிநபராக இருந்தால் அதிகபட்சம் 4.5 லட்சம் ரூபாய் வரையும், அதுவே கூட்டு கணக்கு திட்டமாக இருந்தால் 9 லட்சம் வரையும் முதலீடு செய்யலாம். 
 
வருங்கால வைப்பு நிதி கணக்கு: 
 
தபால் அலுவலகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்கையும் ஒப்பிடுகையில் இதுவே அதிக லாபம் அளிக்கக் கூடிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாதத்திற்குக் குறைந்தது பட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம். 
 
மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் முதிர்ச்சி காலம் முன்பே திரும்பிப் பெறும் வசதி கிடையாது. இத்திட்டம் மூலம்  பெறும் லாபத்திற்கு வரி ஏதும் கிடையாது. அதுமட்டும் இல்லாமல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது கடன் பெறும் வசதியும் உண்டு.
 
தேசிய சேமிப்பு பத்திரம்:
 
அஞ்சல் துறையில் உள்ள பல சேமிப்புத் திட்டங்களைப் போன்று தேசிய சேமிப்பு பத்திர திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தில் வங்கிகளை விடச் சிறிது அதிகமான வட்டியைப் பெறலாம். 
 
பொதுத் துறை வங்கிகளை விடக் குறைந்தது 0.5 சதவீதம் அதிக வட்டியை இத்திட்டத்தில் பெறலாம். 8.1 சதவீதம் வரை லாபம் அளிக்கும் இத்திட்டத்திலும் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.
 
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:
 
இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது 8.6 சதவீதம் வரை வட்டி விகிதம் பெறலாம். அதுமட்டும் இல்லாமல் இத்திட்டத்திற்கும் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்.
 
கிசான் விக்காஸ் பத்ரா:
 
கிசான் விக்காஸ் பத்ரா திட்டத்தில் வருமான வரி விலக்கு இல்லாததால் பெரும்பாலம் யாரும் இத்திட்டத்தை விரும்புவதில்லை. ஆனால் இத்திட்டத்தில் 110 மாதங்கள் அதாவது 9 வருடம் 2 மாதங்கள் வரை முதலீடு செய்திருந்தால் முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கும்.
 
செல்வ மகள் திட்டம்:
 
மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத்திட்டம் தமிழ்நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை: பிஸ்கெட் சாப்பிட்டு உயிர்வாழும் இளம்பெண்