இந்தியாவில் உள்ள வோல்ஸ்வேகன் கார் தொழிற்சாலைக்கு, உலக வங்கியின் துணை நிறுவனமான இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (IFC) ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.
இதன் மூலம் புனேயில் உள்ள வோல்ஸ்வேகன் ஆலையில் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது என்று ஐஎஃப்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் தயாரிப்புத் தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதில் ஏற்கெனவே வோல்ஸ்வேகன் நிறுவனம் ரூ. 750 கோடி வரை முதலீடு செய்துள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கார்களைத் தயாரிக்க முடியும். இந்நிறுவனம் சிறிய ரகக் கார்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஆலையை உரிய காலத்தில் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி உதவிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் இந்த கடன் தொகை வழங்கப்பட்டதாக உலக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.