ரயில் நிலையங்களில் 24 மணிநேரமும் இலவச தூய குடிநீர் வழங்குவதற்கான புதிய திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தூய குடிநீர் திட்டம் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் என்ற முறையில் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வர்த்தக விளம்பரங்கள் வாயிலாக குடிநீர் வழங்கும் இயந்திரங்களை நிறுவவும், இயக்கவும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த இயந்திரங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு இயந்திரங்களில் விளம்பரம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இந்த இயந்திரங்களின் மூலம் வழங்கப்படும் குடிநீரை பாட்டில்களிலோ, கிளாஸ்களிலோ அடைப்பதற்கு அனுமதி கிடையாது. இதற்கு பயணிகளிடமோ, ரயில்வேயிடமோ கட்டணம் வசூலிக்கப்படாது.
இயந்திரங்களை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம், தண்ணீரை மட்டும் ரயில்வே இலவசமாக வழங்கும்.
தனியார் நிறுவனங்கள் இயந்திரங்கள் எப்போதும் இயங்குவதையும், தேவையான பராமரிப்பு செய்யப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மண்டல ரயில்வே அலுவலகங்கள் இத்திட்டத்திற்கான விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனகளை அனுப்பியுள்ளன. விருப்பமுள்ள தனியார்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.