டாடா மோட்டார் நிறுவனம் புதிய இண்டிகா மான்ஷா ரக காரை நேற்று அறிமுகப்படுத்தியது.
இதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா அறிமுகம் செய்து வைத்தார். பெட்ரோலில் ஓடக்கூடிய மான்ஷா ரக காரின் விலை ரூ. 4.95 லட்சம். டீசலில் ஓடும் காரின் விலை ரூ.6.85 லட்சம்.
இந்நிறுவனம் இன்டிகா ரக கார்களை அறிமுகப்படுத்திய ஆறு வருடங்களுக்கு பிறகு, மான்ஷா ரக காரை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து ரத்தன் டாடா கூறுகையில், இந்த ரக கார்களில், இது தலைசிறந்த காராக இருக்கும் என்று கூறினார்.
பாசஞ்சர் கார் பிரிவு தலைவர் ராஜுவ் துபே கூறுகையில், இந்த காரை உற்பத்தி செய்ய ரூ.2 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்து உள்ளோம்.
இந்த கார் பூனா அருகே ஜங்காஜானில் அமைந்துள்ள டாடா-பியட் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும். இன்டிகா ரக கார்கள் மாதத்திற்கு 3 ஆயிரம் வரை விற்பனை ஆகின்றன. இதை விட அதிக அளவு மான்ஷா கார் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கின்றோம்.
நானோ ரக கார்கள் கடந்த மூன்று மாதங்களாக மாதத்திற்கு 7,500 கார்கள் விற்பனை செய்து வருகின்றோம். இதன் எண்ணிக்கையை மாதத்திற்கு மேலும் 3 ஆயிரம் அதிகரிக்கின்றோம். குஜராத் மாநிலத்தில் சனாந்த்தில் அமைக்கபடும் கார் தொழிற்சாலையில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் கார் உற்பத்தி துவங்கும் என்று தெரிவித்தார்.