Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு விருது: ஸ்டாலின்

Advertiesment
சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு விருது: ஸ்டாலின்
சென்னை: , திங்கள், 19 ஏப்ரல் 2010 (11:09 IST)
தமிழக அரசின் சார்பில் சிறந்த தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு, பிசினஸ் லைன் நாளிதழும் இணைந்து தமிழ்நாட்டில் சிறந்த தொழில் முனைவோர்களை தேர்ந்தெடுத்துள்ளன.

இந்த விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறந்த தொழில் முனைவோர் 9 பேருக்கு விருது வழங்கினார்.

இந்த விருதுகளை வழங்கி ஸ்டாலின் பேசுகையில், இந்த விருதுபெற்ற ஒன்பது தொழிலதிபர்களையும் பாராட்டுகிறேன். இவர்கள் கடும் உழைப்பு, இடைவிடாத முயற்சி, மற்றும் திறமை மூலமே விருதினை பெற்றிருக்கிறார்கள்.

இவர்களது வழியிலே, வருங்காலங்களில் ஏனைய தொழில் முனைவோரும், தொழிலை சிறப்பாக நடத்தி விருதினைப் பெற எனது வாழ்த்துக்களையும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த துணை நிற்க வேண்டும் என்ற என் வேண்டுகோளையும், தமிழக தொழில்துறை அமைச்சர் என்கிற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய தொழிற் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசிற்கிடையேயான தொடர்பு மிகவும் வலுவான ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பினர் அளித்த முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எப்பொழுதும் தயங்கியதில்லை.

தனியார் நிறுவனங்களிலிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதியுடனும், மின்துறை அமைச்சருடனும் கலந்துபேசி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த சேவைக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளது . அதனை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், தற்போது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. இதில் நிச்சயம் நல்லதொரு முடிவு எடுக்கப்படும்.

இந்தியாவிலேயே அந்நிய நாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை பெறுவதில் தமிழகம்

முன்னிலையில் உள்ளது. சமீப காலமாக அந்நிய நேரடி முதலீட்டை அதிகளவில் ஈர்த்து 8 முதல் 9 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய அயல்நாட்டு முதலீட்டை தமிழகம் பெற்றுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சிறு, குறுந்தொழில் முனைவோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமிழ்நாட்டில் சிறுதொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1991-1992 ஆம் ஆண்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரமாக இருந்தது. இது 2008-2009 ஆம் ஆண்டில் 9 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதை தமிழக தொழில்- வர்த்தக கூட்டமைப்பின் அறிக்கையின் ஆதாரத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்த வேலைவாய்ப்பில் 15 விழுக்காடு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அளிக்கின்றன. இவற்றின் ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 40 விழுக்காடாக உள்ளது.

இயற்கை வளம், புவியியல் ரீதியான முக்கியத்துவம், அறிவுத்திறன் ஆகிய வளங்கள், தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ளன. இதனால், தொழில் வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமான இடமாக தமிழகம் கருதப்படுகிறது.

தொழில் நிறுவனங்கள் முற்றிலும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது. அவற்றிற்கு சமூக நோக்கமும் தேவை. சுற்றுச்சூழலை பாதுகாத்து, தங்களது, தொழில் நடவடிக்கை அமைந்துள்ள பகுதியில், சமூக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதில் சிறப்பான அக்கறையை செலுத்த வேண்டிய பொறுப்பும் தொழில் நிறுவனங்களுக்கு உள்ளது.

இத்தகைய, சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும், நிறுவனங்களை பாராட்டி, இதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது.

இத்தகைய விருதுகளை 2007-08 ஆம் ஆண்டு முதல் 9 தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம்.

தமிழகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் செயல்பாடுகள், அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்தாண்டு முதல் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் உறவுகள், உற்பத்தித்திறன், ஏற்றுமதிகள், மாசற்ற தொழில்நுட்ப பயன்பாடு, சுற்றுச்சூழல் நேயம், நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.

இந்த விருதுகளை வாசன் ஹெல்த் கேர் சார்பில் அதன் தலைவர் டாக்டர் அருண், யுனிவர்சல் டெலிகம்யூனிகேசன்ஸ் இந்தியா சார்பில், அதன் நிறுவனர் டி.சதீஷ்பாபு, டி.வி.எஸ்.லாஜிஸ்டிக் சர்வீசஸ் சார்பில் நிர்வாக இயக்குனர் ஆர்.தினேஷ், டேக் சொலுஷன் சார்பில் துணைத்தலைவர் எச்.ஆர்.சீனிவாசன், சிம்பாலிக் இன்போடெக் சார்பில் நிறுவனர் வி.சுந்தரமூர்த்தி, சக்தி மசாலா சார்பில் நிர்வாக இயக்குனர் பி.சி.துரைசாமி, பவர் கீயர் சார்பில் அதன் தலைவர் துரைராஜ், மாயாஅப்ளையன்ஸ் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் டி.டி.வரதராஜன், மார்க் சார்பில் அதன் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


Share this Story:

Follow Webdunia tamil