மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாவில் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 15 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய நிலக்கரித் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்திற்கு பல இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் சொந்தமாக உள்ளது. இதில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி, மின் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோல் இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளில் 15 விழுக்காடு விற்பனை செய்யப்படும். இதில் 10 விழுக்காடு பங்குகளை பொதுப் பங்கு வெளியீடு மூலமும், மீதமுள்ள 5 விழுக்காட்டில் 3 விழுக்காடு ஊழியர்களுக்கும், 2 விழுக்காடு சுரங்கம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு வழங்கலாம் என்று நிலக்கரி துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம், பங்கு விற்பனைத் துறை ஆகியவைகளுடன் கோல் இந்தியா ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
ஊழியர்களுக்கும், நில இழப்பீட்டாளர்களுக்கு பங்குகளை ஒதுக்குவதில் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என தெரிகிறது.