Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் மகத்துவமும், சிறப்புகளும்!

தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் மகத்துவமும், சிறப்புகளும்!
, வியாழன், 11 ஜனவரி 2018 (16:44 IST)
பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற  உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல்  அமைவதனால் அனைத்து மக்களிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. 
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது  உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும்  மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. 
 
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை, இரண்டாம் நாள்  தைப்பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல்.
 
போகி: போகி மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள்  கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று வீட்டில் தேங்கிப்  போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில்  இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.  இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு  புதுப் பொலிவுடன் காணப்படும்.
 
தைப்பொங்கல்: தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு தேவையான பொருட்களை  ஆயத்தப்படுத்திக் கொள்வர். அதாவது மண்ணிலானா புதுப்பானைகளை வாங்கி, புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில்  பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும்  புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து  விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும்  வைப்பார்கள். 
 
பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்!  பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி, பொங்கலை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும்  கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.
 
மாட்டுப் பொங்கல்: மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும்  பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
 
காணும் பொங்கல்: காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப்  போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து: தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க்கூடியவை - வர‌க் கூடாதவை!