விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். குளந்தங்கரை, அரசமரத்தடி, தெருமுக்கு என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். மண், சாணம், மஞ்சள் ஆகிய எளிய பொருட்களிலும் விநாயகரை உருவாக்கி வழிபடலாம்.
எந்த ஒரு காரியமும் விநாயகரை வழிபட்டுத் தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் ‘முதற்கடவுள்’ ஆகிறார். கணங்களுக்கு அதிபதி ஆதலால் கணபதி என்றும், ஆனை முகத்தை உடையவர் ஆதலால் ஆனைமுகன்,கஜமுகன் என்றும் துன்பங்களைப் போக்குவதால் ‘விக்னேஷ்வரன்’ என்றும் அழைக்கப்படுகிறார். எளிய அருகம்புல் விநாயகருக்கு உகந்ததாகும்.
பரந்த இவ்வுலகில் நல்லவைகளை மட்டுமே கூர்ந்து நோக்க வேண்டும் என்பதையே விநாயகரின் கூரிய சிறிய கண்கள் உணர்த்துகின்றன. செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விநாயகரின் முறம் போன்ற செவிகள் குறிக்கின்றன.
விநாயகரின் ஒரு கையில் பாசம் உள்ளது, அது படைத்தலைக் குறிக்கின்றது. தந்தத்துடன் கூடிய தும்பிக்கை காத்தலைக் குறிக்கின்றது. அங்குசம் ஏந்தியகை அழித்தலைக் குறிக்கின்றது.
மோதகம் ஏந்திய கை மறைத்தலைக் குறிக்கின்றது. உயர்த்திய கை அருளலைக் குறிக்கின்றது. இவ்வாறு ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன.
விநாயகரின் பெரிய வயிறு எல்லா உயிர்களும், உலகங்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிக்கின்றது. விநாயகர் மகாபாரதத்தை எழுதுவதற்கு கொம்பை ஒடித்ததால் கொம்புகள் ஞானத்தைக் குறிக்கின்றன.
விநாயகரின் பெரிய திருவடிகள் நல்லனவற்றை செய்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதைக் குறிக்கின்றன. மொத்தத்தில் விநாயகர் திருவுருவம் வெளித் தோற்றத்தைவிட அறிவுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற உண்மையை உணர்த்துகின்றது.