Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி

அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி
தென்னிந்தியாவில் ஸ்ரீ ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது.


 
 
நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
 
கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.
 
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
 
குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா? 
 
நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள். 
 
கிருஷ்ண ஜெயந்தி பூஜைமுறை வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு. 
 
நீ எனக்கு ஒரு இலையைக் கொடு; அல்லது பூவை கொடு; இல்லை ஒரு பழத்தைக் கொடு; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன். பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம் படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வம் உண்டாக வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு