கிருஷ்ணனின் இளமைப் பருவம் கேட்பதற்கே இனிமையாக இருக்கும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்த கிருஷ்ணன், குறுப்புக்காரச் சிறுவனாகவும் இருந்தான்.
ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது, நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது, மண்ணைத் திண்பது, வெண்ணையை திருடி உண்பது போன்றவை அவரது விளையாட்டுக்களில் சில.
கிருஷ்ண ஜெயந்தியின் போது வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்கும். வாசல் முழுக்க கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை செல்லும் சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை கோலமிடுவார்கள்.
கிருஷ்ண ஜெயந்திக்கு இனிப்புப் பலகாரங்கள், குறிப்பாக கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல் மற்றும் பழங்கள், கார வகைகள் நிவேதனம் செய்யப்படும். பூஜைக்குப் பின் வெண்ணெய்யை உண்டு பெண்கள் விரதம் முடித்துக் கொள்வார்கள்.
மாயக் கண்ணன் இளமையில் செய்த சேஷ்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும். அவற்றை போற்றும் வகையில், கிருஷ்ண ஜெயந்தியன்று உறியடித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
பாண்டவர்களுக்கு உதவியாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசித்த மொழிகளையே நாம் 'பகவத்கீதை'யாகப் போற்றி வருகிறோம்.
கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தைக் கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று, வளம் பெறுவோம்!