வானிலை மாற்றத்தினால் ஏற்படும் மோசமான இயற்கைச் சீரழிவுகளைச் சமாளிக்க ஏழை நாடுகளுக்கு பில்லியன் டாலர்கள் கணக்கில் உதவித் தொகை அளிப்பதாய் கோபன்ஹேகன் மாநாட்டில் ஐ.நா. சூளூரைத்தது. ஆனால் தற்போது உதவித் தொகை கடன் தொகையாக மாறியுள்ளது.
ஐ.நா. திரட்டியுள்ள வானிலை மாற்ற உதவித் தொகைகளில் பாதி கடனாகவே அளிக்கப்படவுள்ளது.
மேலும் உதவி என்பது வெப்பவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான உதவியாகவும் இருக்கவேண்டும். ஆனால் தற்போது கடன் என்ற பெயரில் ஒரு குறைந்த தொகை விளைவுகளைச் சமாளிக்க என்ற பெயரில் தூக்கி வீசப்படுகிறது. இதனை சுற்றுசூழல்வாதிகள் உடனடியாக கண்டனம் செய்துள்ளனர்.
தற்போது மெக்சிகோவில் உள்ள கான்கன் மாநாட்டில் இரண்டாம் நாளான நேற்று ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றிய செய்தியில் ஐ.நா. 7.2 பில்லியன் டாலர்கள் தொகையில் 2.9 பில்லியன் டாலர்கள் தொகை திரட்டியுள்ளது.
2012ஆம் ஆண்டு முன்னேறிய நாடுகள் ஏழை நாடுகளுக்கு சுற்றுசூழல் விளைவுகளைச் சமாளிக்க 30 பில்லியன் டாலர்கள் தொகை தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் இதுவரை பாதித் தொகைதான் திரட்டப்பட்டுள்ளது. கான்கனில் உள்ள ஐ.நா. வின் தலைமை உடன்படிக்கையாளரான ஆர்த்தர் ரஞ்ச்-மெட்ஸ்ஜர், முதலில் கடனாக அளிப்பதை சிறந்த வழிமுறை என்று கூறியுள்ளார்.
அதுவும் சுத்தமான எரி ஆற்றல் திட்டங்களுக்கான கடனுதவியாகவே இது வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார் அவர். எனவே முன்னேறிய நாடுகள் நாசம் செய்யும் வானிலையால் ஏற்படும் மோசமான விளைவுகளைச்சமாளிக்கக் கூட அல்ல இந்த கடனுதவி மேலும் எரிபொருளை பயன்படுத்த அதாவது பசுமைப் பாதுகாப்பு எரிபொருள் (இப்படி ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை) பயன்பாட்டிற்கான கடனுதவி என்று கூறுகிறது ஐ.நா.
மெட்ஜர் மேலும் கூறுவதைக் கவனித்தால் நமக்கு விசித்திரமாகவே இருக்கும்.
அதாவது ஏற்கனவே அதிகம் கடன்படாத நாடுகளுக்கு உதவித்தொகை அளிப்பது பணத்தை விரயம் செய்வது என்கிறார் மெட்ஜர். அதனால் முதலில் கடனைத் திருப்பித் தரும் நாடுகளுக்கு வானிலை மாற்ற விளைவுகளைச் சமாளிக்க கடனுதவி என்ற பெயரில் ஒரு தொகை அளிக்கப்படுகிறது. அதன் பிறகு இந்த நாடுகள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தி விடுமாம் அதனை மேலும் இது போன்ற "நல்ல" (!) காரியங்களுக்கு ஐ.நா. பயன்படுத்துமாம்.
ஐ.நா.வின் இந்தத் திட்டத்தையும், அதற்கான வக்காலத்தையும் சரியாக விமர்சிக்கும் கிரீன் பீஸ் இயக்க உறுப்பினர் டாம் ரைடிங், தொழிற்துறையில் முன்னேறிய நாடுகள் புவிவெப்பமடைதலின் விளைவுகளுக்கு பாதிக்கப்படும் நாடுகளுக்கு கடனுதவி அளிப்பது என்பது மோசமான திட்டம் என்று விமர்சித்துள்ளது.
மேலும் டாம் ரைடிங் நகைச்சுவை உணர்வுடன் கூறியிருப்பது நகைச்சுவையை மீறிய அவலத்தைச் சுட்டுவதாய் அமைந்துள்ளது:
"நான் என் காரைக் கொண்டு நேரே இன்னொருவர் கார் மீது மோதுகிறேன், அதன் பிறகு ஒரு தொகையை அவருக்குக் கடனாகக் கொடுத்து காரை பழுது பார்க்கக் கூறுகிறேன்." இதுதான் ஐ.நா. கூறுவது என்று கூறுகிறார் கிரீன் பீஸ் இயக்க உறுப்பினர்.
காங்கோவில் காடுகள் அழிப்பைத் தடுப்பது, மாலத்தீவுகளின் கடற்கரைப் பகுதிகளை அரிப்பிலிருந்து காப்பது, கிராமப்புற சீனாவில் சுற்றுசூழலைப் பாதுகாப்பதற்குச் சாதகமான நிலைமைகளை வளர்த்தெடுப்பது உள்ளிட்ட விஷயங்களும் ஐ.நா.வின் உதவித்திட்டங்களில் உள்ளது.
ஆனால் வளரும் நாடுகளின் வெப்பவாயு வெளியேற்றங்களைக் குறைப்பதில் 50% தொகையும் 30% தொகை வானிலை மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க ஏழை நாடுகளுக்குக் கொடுக்கப்படுவதாயும் தற்போது பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு தவறான அணுகுமுறை என்று ஆக்ஸ்ஃபாம் கூறுகிறது.
ஆனால் பாதிக்கப்படும் ஏழை நாடுகள் முன்னேறிய நாடுகளிலிருந்து அதிக உதவிகளை எதிர்பார்க்கிறது. ஏனெனில் கடலரிப்பு, மிகப்பெரிய புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவை ஏழைநாடுகளே.
ஆனால் ஏழைநாடுகள் கொடுக்கும் உதவிகளை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறதா என்பதை தீவிரமாக கண்காணிப்பதும் அவசியம் என்ற ரீதியிலும் கான்கன் மாநாட்டு விவாதங்கள் சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.