லவாசா திட்டம்: கடும் நடவடிக்கைக்கு பரிசீலனை
, செவ்வாய், 18 ஜனவரி 2011 (15:54 IST)
மும்பை, புனே ஆகிய முக்கிய நகரங்களுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட அதிநவீன 'மலைநகரம்' லவாசா. இதன் கட்டுமானப்பணிகள் நன்றாக முன்னேறியுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் பசுமை விதிகள் கடுமையாக மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த நகரை உருவாக்கி வரும் லவாசா கார்ப்பரேஷன் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க பரிசீலனை செய்து வருகிறது.லவாசா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேஷன் (HCC) என்ற பெருநிறுவனத்தின் துணை நிறுவனமாகும். மோஸே பள்ளத்தாக்குப் பகுதியில் 7 மலைகளைக் கொண்ட அழகான இயற்கை அழகு கொஞ்சும் இடம்தான் லவாசா. மிக அழகான ஏரியும் உள்ளது. இந்த 7 மலைகள் மீதும் 100 சதுர கி.மீ. பரப்பளவுக்கு 'புதிய நகரமையம்' என்ற கருத்தாக்கத்தின் படி முதன் முதலாக மலைநகரம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மலைநகரம் புனேயிற்கு அருகேயுள்ளது. மும்பைக்கு சற்று தொலைவில் 200 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்தத் திட்டம் 2004ஆம் ஆண்டே துவங்கப்பட்டுவிட்டது. ரூ.2000 கோடி பெறுமானமுள்ளத் திட்டமாகும் இது.
ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட அறிவிக்கைகளின்படி ஏன் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிகளைப்பெறவில்லை என்று அமைச்சகம் லவாசாவிற்கு தாக்கீது அனுப்பியது.