[
மெக்சிகோவில் உள்ள கான்கன் நகரில் ஐ.நா. வானிலை மாநாடு நடைபெற்று வருகிறது. அங்கு பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே போராட்டம் நடைபெற்று வருகிறது. புவி வெப்பமடைதலுக்குக் காரணமான வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவி செய்வதில் பேரம் பேசி வருகின்றன. வெப்பவாயு வெளியேற்றத்தைக் கடுமையாகக் குறைப்பது பற்றிய கியோட்டோ ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவையெல்லாமும் சுற்றுச் சூழல் என்பதை ஏதோ அரசுகளின் பிடியில் சிக்கியுள்ள விவகாரமாக்கியுள்ளது. சுற்றுச் சூழல் நாசமானதன் அடிப்படைகள் என்ன? அதனை ஊக்குவித்த மூலச் சிந்தனைகள் என்ன என்பதை நாம் பார்த்தோமானால், மேற்கத்திய நாடுகளின் சிந்தனை வரலாற்றிலேயே இயற்கைப் பற்றிய ஒரு எதிர்மறையான பார்வை ஆதிக்கம் செலுத்தியுள்ளதை நாம் உணர முடியும். அந்த அடிப்படையில் இயற்கை, சூழல் பற்றிய மேற்கத்தியத் தத்துவ, விஞ்ஞானப் பர்வைகள் என்ன கூறியுள்ளது என்பதை ஓரளவுக்கு எடுத்துக்கூற முயற்சி செய்துள்ளோம்]---------
ஒவ்வொரு யுகமும் இயற்கைப் பற்றிய தனிச்சிறப்பான பார்வைகளை, கருத்தியல்களை, புரிதல்களை, அனுமானங்களைக் கொண்டது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இயற்கைப் பற்றிய பார்வைகளை வைத்து அந்த குறிப்பிட்ட காலத்தில் அந்த குறிப்பிட்ட நாகரீகம் எவ்வாறு சிந்தித்தது, செயல்பட்டது என்பதை நாம் அறியமுடியும்.பொதுவாக மொழியில்லையேல் சிந்தனையில்லை. இயற்கையையும் மனிதன் மொழிவழிதான் சிந்தித்தான். இதில் உருவகங்கள் (Metaphors) பெரும்பங்கு வகித்தன.பொதுவாக இரண்டு விதமானப் பார்வைகள் இவ்வுலகில் இயற்கை குறித்து இருந்து வருகிறது.1.
மானுட மையப் பார்வை (Anthropo Centric World-view): அதாவது பிரபஞ்சத்தில் மனிதனே மையம், அவனது சிந்தனைகளும் செயலுமே இயற்கையை வடிவமைக்கிறது என்ற பார்வை.2.
உயிரிமையப்பார்வை (Bio-centric world-view).இதன் படி இயற்கை அல்லது பூமி பற்றிய ஒரு முற்றுமுழுதானப் பார்வை முன் வைக்கப்படுகிறது. இதில் மனிதன்/இயற்கை என்ற துவைதப்பார்வை அல்லது சிந்தனை கிடையாது.இயற்கைப் பற்றிய மானுடமையப் பார்வை மேற்குலகின் மத்திய கால சிந்தனைகளையும் உலகப்பார்வையும் ஒட்டியது. இருப்பின் சங்கிலித் தொடர் (chain of being) என்று இது அழைக்கப்படுகிறது. இதன் படி ஒரு படிமுறை அமைப்பு சிந்திக்கப்பட்டுள்ளது.அதாவது கடவுள், அதற்குக் கீழ் தேவதைகள், துர்தேவதைகள், நட்சத்திரங்கள், சந்திரன், அரசர்கள், இளவரசர்கள், புனிதர்கள், மனிதன், காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள், மரங்கள், பிறத் தாவரங்கள், விலைமதிப்பில்லா கற்கள், விலைமதிப்பில்லா உலோகங்கள், மற்றும் பிற உலோகங்கள் என்ற படிமுறையில் சிந்திக்கப்பட்டுள்ளது.மானுடமையப் பார்வையின் மற்றொரு உலகப் பார்வை அல்லது கருத்தியல் இயற்கையை பெரும் எந்திரமாக உருவகிப்பது.இரண்டாம் மாதிரியான உயிர் மையப் பார்வை இயற்கையைத் தாயாகவும், இயற்கையை வலைப்பின்னலாகவும், இயற்கையை அளவுகோலாகவும் கருத்தில் கொள்வதாகும்.ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இயற்கை பற்றிய சிந்தித்தல் முறையால் இன்று பல்வேறு விதமான சுற்றுச்சூழல் நாசங்கள் விளைந்துள்ளன. குறிப்பாக மனிதனின் இயற்கைப் பற்றிய அறிதல் முறை அதனை, தனது வசதியான பயன்பாட்டுக்குக் கொண்டு சென்றதோடு, மனிதன் தன்னை மட்டுமே முன்னிறுத்தி பிற உயிரிகள், பிற தாவரங்கள் அல்லது சுற்றுசூழல் அமைப்பு என்று இன்று நாம் கூறும் ஒன்றை தனக்குக் கீழான ஒன்றாகச் சிந்தித்த போக்குகளையும் உருவாக்கியது.சுற்றுசூழல் பற்றி நாம் யோசிப்பது பலவகையில் நமது நனவுத் தளத்தில் அல்லாமல் நனவிலி தளத்திலேயே நடைபெற்று வருவதால் நாம் சுற்றுச் சூழல் அல்லது இயற்கைப் பற்றிய பார்வை ஒரு வகையில் நமக்குச் சாதகமான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளது. இயற்கைக்குச் சாதகமான ஒன்றாக இருப்பதில்லை.இதனால் நாம் இயற்கைக் குறித்த நமது மொழியை முதலில் புரிந்து கொள்வது அவசியம். உதாரணத்திற்கு ஒன்று கூறவேண்டுமென்றால் இயற்கைப் பற்றிய நமது ஒரு வகையான மாந்திரீக புரிதல் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி(!)க்கு இட்டுச் சென்றுள்ளது.நாம் குறிப்பாக மொழிக்குள் நுழையும் காலக்கட்டத்தில் நமது சிந்தனை, செயல், கருத்தியல்கள் ஆகியவை மொழியால் கட்டமைக்கப்படுகின்றன. எனவே நாம் இயற்கை குறித்த நமது மொழியை ஆராயாமல் அதனைக் காப்பாற்றுவது குறித்து பேச முடியாது.இதற்கு ஒரு உதாரணம் கூறவேண்டுமென்றால்: மரம் வெட்டப்பட்டது என்று கூறுகிறோம் ஆனால் யார் வெட்டினார்கள் என்ற காரணி இந்த வாசகத்தில் இல்லை.'
அந்த மரம் மனிதனால் வெட்டப்பட்டது." என்று கூறும்போது மனிதனே மரத்தை வெட்டுகிறான் என்ற புரிதல் போய் மனிதன் செயப்பாட்டு வினையாக மாறுகிறான். அந்த மனிதன் மரத்தை வெட்டினான் என்று கூறினால் நாம் உடனடியாக ஏன் வெட்டினான் என்று கேட்பதில்லை, மாறாக அது ஒரு வெறும் கூற்றாகவே நமக்குப்படுகிறது. இது போன்று மொழியும் அது புழங்கும் பண்பாடும் நமது சிந்தனையை ஆக்ரமித்துள்ளது.எனவே மேற்குலகில் இருந்து வரும் இயற்கைப் பற்றிய உருவகங்கள் எந்தெந்த காலக்கட்டங்களில் எவ்வாறு இருந்தன என்பதைப் பேசுகிறோம்.இயற்கை என்பதற்கு அதி நவீன அகராதியை நாம் புரட்டிப் பார்த்தால் 10க்கும் மேற்பட்ட பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன."
பௌதீக உலகில் உள்ள அனைத்து பொருட்கள், உயிரிகளின் ஒட்டுமொத்தம்" என்று ஒரு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது அல்லது மனிதனால் தயாரிக்கப்படாதது அனைத்தும் இயற்கை என்றும் ஒரு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.இயற்கை என்பதை பூமிக்கு மட்டும் சுருக்க முடியாது அல்லது பூமியின் பயோ-ஸ்பியர் என்பதற்கு மட்டும் நாம் குறுக்க முடியாது. ஆனால் இது இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் அதில் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் மற்றவற்றுடன் உறவு கொண்டுள்ள ஒரு நட்பு நிலை என்றும் நாம் ஒரு முழுமையான பார்வையை வளர்த்தெடுக்கலாம்.
1. மானுட மைய உலகப் பார்வை
இது மனிதனை மையப்படுத்தி மற்றவற்றை அவனின் உபயோகத்துக்குச் சுருக்கும் பயன்பாட்டுவாத உலகப் பார்வையாகும்.
இந்தப் பார்வையை முதன் முதலில் கொண்டவர் பிரான்சிஸ் பேகன் என்ற இங்கிலாந்து தத்துவ ஞானி, இவர்தான் knowledge is Power என்ற மகாவாக்கியத்தின் தந்தை. சுருங்கக்கூறின் இன்றைய உலகின் துன்பத்திற்கு அன்றே வித்திட்டவர் என்று கூறலாம். ஆனால் இவரது அறம் பற்றிய சிந்தனைகள் பரந்துபட்டது என்பதால் அவரை நாம் இயற்கை விரோதி என்று அவ்வளவு சுலபமாக நிரூபித்து விட முடியாது.
ஆனால் இவர்தான் மனிதனே படைப்பின் மையம், மற்றவையெல்லாம் உலகமே இவனுக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டது என்ற கருத்தைக் கொண்டவர் என்பதில் ஐயமில்லை.
இதன்படி இயற்கை என்பது மனித வாழ்க்கையை ஆதரிக்க வேண்டுவதற்காகவே உள்ளது என்ற கருத்தியல் உருவாகிறது. நாம் பார்க்காவிட்டால் ஆகாயம் நீல நிறமாக இருக்குமா என்ற ஆதிசங்கரரின் கேள்வியையும் நாம் இதனுடன் இப்போதைக்கு ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.
முதல் கருத்தாக்கம் : இயற்கை என்பது படிமுறை அமைப்பாக
அரிஸ்டாடிலின் இருப்பின் தொடர் சங்கிலி (Chain of Being) என்ற கருத்தாக்கத்தில் தாவரங்கள் விலங்குகளுக்காக உள்ளது, விலங்குகள் மனிதனுக்காக வாழ்கின்றன. அதாவது மனிதனை ஒரு அடிப்படை அளவையாகக் கொண்டு பிறவற்றின் இருப்பை அளப்பது. ஆனால் இந்த படிமுறை ஏதோ இயற்கையாக அமைந்ததல்ல, அதற்கு ஒரு மூலாதார இயக்குனர் உள்ளார். அவரால் மட்டுமே இதனை புரிந்து கொள்ள முடியும் அல்லது விளக்க முடியும். இங்கு அரிஸ்டாடில் கடவுள் சிந்தனைக்குத் தாவுகிறார்.
அது எப்படி இந்தப் படிமுறையில் இடைவேளையும் இடைவெளியும் இல்லாமல் போகும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மறைந்த உயிரிகள் எந்தப் படிமுறையில் அடங்கும் என்று அப்போதே கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்குள் நாம் இப்போது செல்லவேண்டாம். இயற்கையைப் புனிதப் படிமுறையாகக் காண்பது ஒரு மொழி உருவகம் என்பதை நாம் இப்போதைக்கு தெரிந்துகொண்டால் போதுமானது.
இதன் பிறகு வளர்ந்த விஞ்ஞானவாதப் பார்வையில் மேற்சொன்ன படிமுறை உருவகம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை பெரிய அளவில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது.
இயற்கை எனும் எந்திரம் என்ற பார்வை
.இயற்கையை எந்திரமாகக் கருதும் பார்வை இன்று வரையிலும் மேற்கத்திய கருத்தியல்களில் ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்தும் ஒன்றுதான்.
17ஆம் நூற்றாண்டில் பிரபஞ்ச இயக்கத்தைச் சிந்தித்த விஞ்ஞானிகளான, நியூட்டன், கோபர்நிகஸ், கெப்லர் மற்றும் கலிலியோ (இவர்களுக்குள்ள வித்தியாசங்கள் இங்கு தொடர்பற்றது) ஆகியோர் இயற்கையின் இயக்கங்களைச் சிந்தித்த வழிமுறை இயந்திரவியல் ரீதியானது. இவர்கள் கணிதம், பௌதிக சூத்திரங்கள் கொண்டு இயற்கையைக் கணித்ததால் இயற்கையே ஒரு பெரிய எந்திரம் என்ற உருவகம் உண்டானது. இந்த எந்திரத்தை வடிவமைத்தவர் கடவுள் அவர்தான் இதனை போற்றிப் பாதுகாத்து வருகிறார். இதனால் அவர் மனிதனிடமிருந்து கீழ்படிதலை எதிர்பார்க்கிறார் போன்ற கருத்துகள் பரவலாயின.
அதாவது மானுட மையப் பார்வையின் முந்தைய உருவகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு இயந்திரவியல் உருவகங்களும் மொழியும் இயற்கையை வர்ணிக்கப் பயன்படுத்தப்பட்டது.
18ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்த விஞ்ஞானவாதப் பார்வைகள் கோலோச்சின. அதாவது படைப்பு பற்றிய இறைமைக் கோட்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டு இயந்திரவியல் பார்வைகள், உருவகங்கள் முன்னிலை வகித்தது.
கார்லோஸ் லின்னேயஸ் என்ற தாவரவியல் விஞ்ஞானியும் பிரபஞ்சம் என்பது ‘ஒருமையான, நன்கு செயல்பட வைக்கப்ட்டுள்ள பிரபஞ்சம்’ ("single, universal, well-oiled machine") என்று கூறினார். இதுதவிர பிரபஞ்சம் என்பது ஒரு மிகப்பெரிய சுழலும் சக்கரம் போன்ற இயந்திரவியல் பார்வைகளும் 18ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சின.
மிகப்பெரிய நவீனத்துவச் சிந்தனாவாதியும், விஞ்ஞானியும், தத்துவ ஞானியுமான டேகார்ட் "விலங்குகள் எந்திரங்களை விட பெரிதல்ல" என்றார். இயற்கையையும் மனிதனை இயக்கும் இயற்கையாகக் கண்டு பெரிய கடிகாரத்திற்கு ஒப்பிட்டார்.
இது தவிர இயற்கையை ஒரு பெரிய பட்டறையாகவும் உருவகித்துள்ளனர்.
1967அம் ஆண்டு கலிபோர்னியாப் பல்கலைக்கழக பூச்சிகள் பற்றிய ஆய்வாளர் ராபர்ட் உசிங்கர் என்பவர் நதி என்பதை இயந்திரக்கருவிகள் இணைத்து பூட்டப்பட்ட வரிசையாகக் கண்டார் (Assembly line). அதாவது தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக நதியைக் கண்டார். இதன் படி நதி என்பதே உற்பத்திகான மூலப்பொருட்களை வழங்கும் ஒரு இடம்.
இயற்கையே பெரும் எந்திரம் என்ற உருவகம்தான் இன்றைய கார்ப்பரேட் தொழில்நுட்ப, இயந்திரவியல் சுரண்டல்வாத நடைமுறைகளுக்குக் காரணமாகியுள்ளது.
சுருங்கக்கூறின் இன்று சுற்றுச்சூழலியல் என்பது, இவர்களைப் பொறுத்தவரை, ஒரு உயிரி-பொருளாதாரம் ஆகியுள்ளது.
பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித் இயற்கையை பெரும் கிடங்காகக் கண்டார். அதாவது மனிதத் திறமைகள் அல்லது உற்பத்திவாதத் திறன்களுக்கான கச்சாப் பொருட்கள் அடங்கிய கிடங்கே இயற்கை என்கிறார் ஆடம் ஸ்மித். தொழில்நுட்பங்களின் உதவியுடன் கச்சாப் பொருட்களை முடிந்த உற்பத்திப் பொருட்களாகச் செய்பவனே மனிதன்!
மேற்கத்தியச் சமூகங்களில் இந்த சுரண்டல்வாத எந்திரமையப்பார்வை இன்றும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒன்றுதான்.
உயிரி மைய உலகப் பார்வை
இந்தப் பார்வை முதலில் நாம் விவாதித்த மானுடமையப் பார்வை, எந்திரமையப் பார்வைக்கு எதிரான விமர்சனமாக எழுந்தது என்று நாம் கூறலாம்.
இதன் படி பிரபஞ்ச சக்திகளுக்குக் கட்டுப்பட்டவனே மனிதன். அதன் முதலாளி அல்ல என்ற புதிய மாற்றுச் சிந்தனை உருவானது.
இதில் இயற்கை என்பது தாய், இயற்கை என்பது வலை, இயற்கை என்பது அளவுகோல் என்ற உருவகங்கள் ஆட்சி செலுத்தின.
இயற்கைத் தாய்
இந்த உருவகம் நமது தினசரி பேச்சுகளிலும் காணப்படுவதுதான், உதாரணமாக பூகம்பம் ஏற்பட்டால் 'பூமாதேவி கோபமடைந்தாள்' பூமாதேவிக்கே பொறுக்கவில்லை போன்ற தினசரி பேச்சுக்களை நாம் கேட்டிருக்கிறோம். கிரேக்க புராணங்களிலும் சில கீழைதேய புராணங்கள், சிந்தனைகளிலும் பூமித்தாய், இயற்கைத்தாய் சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன.
இது போன்ற சிந்தனைகளில் உள்ள பெண்ணியம் சார்ந்த படைப்புவாதக் கோட்பாடுகள் விஞ்ஞானப் புத்தொளிக் காலங்களுக்குப் பிறகு மடத்தனம் என்பதாக மறைந்து போனது.
ஆனால் தற்போது அடக்கப்பட்டவைகள் மீண்டும் உயிர்த்தெழும் காலம் ஆகையால் பூமித்தாய் சிந்தனை, அல்லது தொன்மம் மீண்டும் கேயா (Gaia theory) கோட்பாடாக உருவெடுத்துள்ளது.
கேயா என்பது கிரேக்க பூமித்தாய். அந்தப்பெயரில் இந்த புதிய கோட்பாடு தோற்றம் கண்டுள்ளது. இதன்படி பூமி அல்லது இயற்கை என்பது மனித உபயோகத்திற்கான 'பொருள்" அல்ல, மாறாக சுய-ஒழுங்கு உயிரியாகும். பூமியே கர்த்தா.
அதாவது அழிவிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான இயைபுடன் இருப்பது பூமி. உயிரிகள் தங்களைச் சுற்றியுள்ள மற்ற உயிரிகளுடன் தங்கள் உறவுகளை மாறிவரும் சீரழிவுகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் தற்காப்புக் கொள்கை உடையது பூமி என்பது கேயா கோட்பாட்டாளர்களின் துணிபு.
பூமியில் மனிதனின் ஆதிக்க இருப்பை கேள்விக்குட்படுத்தி பூமியில் அனைத்து வாழ்க்கையின் மீதான ஒரு விதமான மரியாதையைக் கோருவது இந்தக் கோட்பாடு.
இயற்கையே வலையாக...
இயற்கையை வலையாகச் சிந்திப்பதும் மானுட மைய, எந்திர மையப் பார்வைக்கு எதிரானதுதான். பூவுலகில் வாழ்வு என்பது படிமுறை அல்ல, அது ஒன்றையொன்று பிணைக்கும் வலைப்பின்னல் என்ற உருவகம் இதற்கு முக்கியமானது. அனைவரும் இயைபுடனும் ஒத்திசைவுடனும் வாழும் பூமி என்பது வாழ்விடம் என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பது இந்தக் கோட்பாடு.
இயற்கை ஒரு பெரும்வலை என்ற கோட்பாட்டின் பிரதான சிந்தனாவாதி ஹென்றி டேவிட் தோரோ ஆவார். அதாவது உயிரிமையப்பார்வையில் சமத்துவத்தை வலியுறுத்தும் சிந்தனையாகும் இது.
வாழ்விற்கான உரிமையில் சமத்துவம் என்பது நமது பௌத்த, சமணக் கொள்கைகளை எதிரொலிப்பதாகும். சீனாவின் தாவோயிஸமும் இந்தக் கொள்கையை வலியுறுத்துவதுதான். இதன் மூலம் சுதந்திரவாத சூழலியம் என்ற புதிய கோட்பாடு உருவானது.
மனிதன், தான் இயற்கையைக் கடந்து பண்பாடு, உற்பத்தி, நாகரீகம் என்ற உயர்நிலைக்கு வந்து விட்டதானக் கற்பனையை உடைப்பது இந்தச் சிந்தனை. அதாவது மனிதன் இயற்கையை ஆதிக்கம் செலுத்தும் இயல்பூக்கம் சமூகக் கட்டுமானத்தினால் உருவானதே. எனவே இயற்கை சுதந்திரமாக இருக்கவேண்டுமென்றால் முதலில் மனிதன் சுதந்திரம் பெறவேண்டும் என்று சுதந்திர சூழலீய வாதம் கூறுகிறது.
இந்தக் கோட்பாட்டின் படி மனிதன், மனிதரல்லாதது, இயற்கை, சமூகம் ஆகியவை விடுதலையடைய வேண்டும் என்ற கொள்கை உடையது இந்தக் கோட்பாடு.
இயற்கை என்பதே அளவுகோலாக
.
இயற்கை என்பதை மானுட முயற்சிகள் அனைத்திற்குமான அளவுகோலாகக் கொள்வது இந்தக் கோட்பாடாகும். அதாவது இயற்கை என்பது ஒரு பெரிய ஆசிரியர் அவர் வழிநடத்துவதின் படி மனிதன் வாழவேண்டும் என்பது இதன் தலையாய கொள்கை.
சுயக் கட்டுப்பாடு, சுயத்தை மறுத்தல் போன்றவை இந்தக்கோட்பாடுகளின் பிரதான கருத்தாகும்.
18 , 19ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த ரொமாண்டிசிசம் என்ற இயக்கம் பெரும்பாலும் இயற்கையைக் கோவிலாக வழிபடும் போக்கைத் தன்னகத்தே கொண்டு எழுந்தது. அதாவது இயற்கை என்ற அடித்தளத்திலிருந்துதான் மானுடம் என்ற ஒன்று கட்டமைக்கப்படவேண்டும் என்பது இவர்களது வாதம்.
இயற்கை வழிகளுக்குத் திரும்புதல் என்ற ஒன்றுதான் மானுடம் கண்டு வரும் துன்பங்களுக்கு விடிவாக இருக்கும். இதனால்தான் இவர்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் இயற்கையை தங்கள் லட்சியமாகக் கொண்டனர். வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், கோல்ரிட்ஜ் உள்ளிட்டவர்கள் இந்தக் கொள்கைகளை உருவாக்கினர்.
இந்தப் பார்வையில் பிரச்சனை என்னவெனில் அறிவெனும் ஆப்பிளைக் கடிக்காத மனிதன் வாழ்ந்த சொர்க்க பூமி என்ற நிலைக்குத் திரும்புதல். அதாவது வீழ்ச்சிக்கு முந்தைய நிலைக்கு மனிதகுலம் திரும்புவது, கிறித்துவக் கொள்கையிலும் இது ஒரு பிரதான கூறாகும்.
பிரெஞ்சு சிந்தனையாளர் ரூசோ இதில் ஒருபடி மேலே சென்று "உன்னதக் காட்டுமிராண்டிகள்" என்று சமூகமும், சமத்துவக் குலைவும் ஏற்படுவதற்கு முந்தைய சமூகத்தினை நோக்கிச் சிந்தித்தார்.
இந்தச் சிந்தனை முறை இன்று ஆழ் சூழலியம் (Deep Ecology) என்ற ஒரு கோட்பாடாக உயர்ச்சி பெற்றுள்ளது. அதாவது இயற்கைக்கு சிறந்தது எது என்று தெரியும் என்ற கொள்கையைக் கொண்டது இந்தக் கோட்பாடு. இதிலிருந்து ஒரு இலையை உருவி சமுதாயச் சூழலியவாதிகள் இயற்கையில் உள்ளது, சமுதாயத்தின் லட்சியமாக இருக்கவேண்டும் என்று கூறினர். இது சுற்றுசூழல் அறம் என்ற கோட்பாடாக தற்போது அறிவுலகில் பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தக் கொள்கையின் அபாயம் என்னவெனில் இயற்கையின் பயங்கரங்களைப் பற்றி இது யோசிக்காது. இயற்கையில் எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற கொள்கை உடையது. இதனடிப்படையில் சமூகக் கட்டுமானம் அமைந்தால் அது என்னவாகும் என்ற கேள்விகளெல்லாம் உள்ளன. இது இயற்கை லட்சியவாத தப்பறை (Naturalistic Fallacy) என்று அழைக்கப்படுகிறது.
இயற்கை, பூமி, மனிதன், உயிரிகள் பற்றிய கீழைத்தேய பார்வைகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் இது மேலும் சிக்கலானது, பல்வேறு நுழைவாயில்களைக் கொண்டது.
ஆனால் ஒன்றை மட்டும் கூற முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை மேற்குலகின் விஞ்ஞானவாத உலகப் பார்வைகளின் அபாயங்களை பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் மகாத்மா காந்தி நிறைய சிந்தித்துள்ளார். மாறாக, நேரு மேற்கத்திய தொழிற்துறை வளர்ச்சிதான் இந்தியாவைப் பழமையிலிருந்து மீட்கும், செல்வ வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று கருதி அதனை செயல்படுத்துவதில் பெரிய முனைப்பு காட்டினார்.
1990களில் இந்தக் கொள்கைதான் உலகமயமாதலுக்கு இணங்க தாராளமயக் கொள்கையாக இன்று உருவெடுத்து ராட்சதமாக வளர்ந்து வளங்களைச் சுரண்டுவதிலும், சுற்றுச் சூழல் உயிரிப் பரவலை அழிப்பது, இயற்கையுடன் வாழும் பழங்குடி மக்களை விரட்டியடிப்பதும், ஏழை/பணக்கார இடைவெளி அதல பாதாளமாக மாறுவதற்கும் வழிவகுத்துள்ளது.
முடிவுரை
இன்றையக் காலக்கட்டத்தில் சுற்றுச் சூழல் பற்றிய விமர்சனச் சிந்தனைகள் சிக்கலுடனும் செறிவுடனும் உருவாகி வருகின்றன. பூமியின் வளங்களை வளர்ந்த நாடுகள் சுரண்டிச் சென்றால் நாளை பின் வரும் சந்ததியினருக்கு வறுமையும், நோயும் மட்டுமே எஞ்சும். மேலும் வளங்கள் சில பல கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்களின் பெட்டியில் பணமாக மாறிவருகிறது. தாவரங்கள், நுண்ணுயிரிகள், கனிமவளங்கள் மேம்பாட்டின் பெயரால் சுரண்டி அழிக்கப்படுவது மட்டுமின்றி, கனிம வளங்கள் நிறைந்துள்ள இயற்கைச் சூழலுடன் வாழ்ந்துவரும் மக்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். இயற்கையை பாதுகாப்பதற்கான திட்டங்களைக் கூட எந்த நாடும் சிந்திப்பதில்லை. அவர்கள் பொருளாதாரக் கொள்கைப்படி பார்த்தாலும் இயற்கையைக் காத்தால்தானே அதனை சுயநலத்திற்காகவேனும் பயன்படுத்த முடியும்? ஆனால் இங்கு அதனையும் தாண்டிய இலாப வெறிதான் தலைவிரித்தாடுகிறது. இதனால் எதிர்காலத்தில் இயற்கை என்பதே இல்லாமல் போகும், இருக்கும் வளங்களும் குறைந்து அந்த குறைந்த வளத்திற்காக நாடுகள் ஒன்றையொன்று அடித்துக் கொள்ள நேரிடும், அப்போது ராணுவ பலம் மிக்க நாடுதான் வளங்களைத் தங்கள் வசம் வைத்திருக்கும் சுற்றுசூழல் பாசிசம் உருவெடுக்கும் அபாயத்தைத் தான் இன்றைய கார்ப்பரேட்,-அரசியல்-மூலதன வலைப்பின்னல் எதிர்காலத்திற்கு செய்து வருகிறது என்று சுற்றுச்சூழல் கோட்பாட்டளர் அலெக்ஸ் ஃபோட்டி என்பவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
எனவே நாம் சுற்றுசூழல் பற்றி சிந்திக்கும்போது அல்லது பத்திரிக்கைச் செய்திகளை வாசிக்கும் போது மேற்கூறியவற்றை மனதில் கொள்ளவேண்டும்.