உலகின் தற்போதைய பொருளாதார வடிவம் உலக "சுற்றுச்சூழல் தற்கொலை ஒப்பந்தம்" என்று ஐ.நா. தலைவர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
டேவோஸில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் குழுவில் உரையாற்றிய அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் பூமியைக் காப்பாற்றும் நோக்கத்துடன் பொருளாதார முன்னேற்றங்களை யோசிக்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
"நமக்குத் தேவை புரட்சி, வானிலை மாற்றம் பழைய பொருளாதார மாதிரிகளை வழக்கொழிந்ததாகச் செய்து விட்டது." என்று கூறிய பான் கீ மூன், தற்போதைய பொருளாதார மாதிரி தேசியப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும், நமக்கு நேரம் அதிகம் இல்லை, வானிலை மாற்றத்தை கவனத்தில் கொண்டு பொருளாதார வளர்ச்சி பற்றி யோசிக்கும் காலம் நெருங்கி விட்டது." என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பான் கீ மூனின் இந்த பேச்சிற்கு பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்தன. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இணைச் செயலதிகாரி ஜிம் பால்சில்லி கூறுகையில், "நாம் அடிப்படை மட்டத்தில் பொருளாதாரம் பற்றிச் சிந்திக்கவேண்டும், பூமியின் செயல்பாடுகள் மீது தாக்கம் செலுத்தாத அளவிற்கான வர்த்தக மாதிரிகள் தேவை." என்றார்.
"சராசரியாக ஒரு ஐரோப்பியர் செலவழிக்கும் எரிசக்தியைக் காட்டிலும் மற்றவர்கள் குறைவான எரிசக்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்துவதன் மூலம் நாம் நியாயமான உலகை தக்க வைக்க இயலாது" என்று மைக்ரோசாஃப்ட் அதிபர் பில் கேட்ஸ் தெரிவித்தார்.
கரியமில வாயு வெளியேற்றத்தையும், உலக நுகர்வையும் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று பில் கேட்ஸ் தனது தீர்வையும் இந்த மாநாட்டில் கூறியுள்ளார்.