புகுஷிமா அணுக் கதிர்வீச்சிற்கு 10 குழந்தைகள் பாதிப்பு
, வெள்ளி, 1 ஜூலை 2011 (13:46 IST)
ஜப்பானில் ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்டு அதிலிருந்து கதிர்வீச்சு இன்றளவும் நின்றபாடில்லை என்ற நிலையில் 10 குழந்தைகளின் சிறுநீர் மாதிரியில் கதிர்வீச்சு பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது.புகுஷிமா அணு உலை ஆட்கொல்லி, சுற்றுச்சூழல் அழிப்பு உலையாக மாறி வருகிறது என்று அங்கு டோக்கியோ மின்சார நிறுவனம் முன்னதாக பொதுமக்கள் ஆர்பாட்டங்களிலும் ஈடுபடத் துவங்கியுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் கடந்த மே 10ஆம் தேதி 6 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர் சிறுமியர் இடத்தில் சிறுநீர்மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் 10 பேரின் உடலிலும் சீசியம்- 134, சீசியம்- 137 அணுக்கதிர்வீச்சின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.தற்போது இந்த கண்டுபிடிப்புகளினால் புகுஷிமா பகுதிக்கு அருகில் 30 கிமீ தொலைவில் இருக்கும் குழந்தைகளிலும் அணுக்கதிர்வீச்சு தாக்கம் ஏற்படுத்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.ஜப்பான் அரசு வழக்கம் போல் இந்த பரிசோதனை முடிவுகளை தீவிரமாக ஆராய்வோம் என்று கூறியுள்ளது. ஆனால் இவர்கள் ஆராய்ச்சிகள் முடிவடைவதற்கு முன்பே பலரது வாழ்க்கை முடிந்து விடும் போல் உள்ளது.சீசியம் 134 என்பதன் அளவு 8 வயது சிறுமியின் சிறுநீரில் லிட்டருக்கு 1.13 அளவு இருந்ததாகத் தெரிகிறது. 7 வயது சிறுவனின் சிறுநீர்மாதிரியில் இது 1.30 என்று காட்டியுள்ளது. இது அதிகமான அளவே என்று இந்த பரிசோதனையை மேற்கொண்ட ஆயு அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் புகுஷிமா டாய்ச்சி அணு உலைகளுக்கு 19 கிமீ முதல் 25 கிமீ தூரத்தில் உள்ள பகுதியில் வாழும் ஒரு 15 பேரின் சிறுநீர் மாதிரியிலும் சீசியம் மற்றும் அயோடின் கதிர்வீச்சு பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது.குழந்தைகளில் அணுக் கதிர்வீச்சுத் தாக்கம் தைராய்டு புற்றுநோய் மற்றும் பிற புற்று நோய்களை உருவாக்கும் என்ற பீதி இப்போது அங்கு பரவி வருகிறது.இதுவரை வெளியான கதிர்வீச்சு அளவுகளில் மானுட உடல் எந்த அளவுக்கு கதிர்வீச்சு தாக்கத்தைத் தாக்குப்பிடிக்கவல்லது என்ற விஞ்ஞானபூர்வ விளக்கங்களை ஜப்பான் அரசு வழங்க தொடர்ந்து தடுமாறி வருகிறது.புகுஷிமாவிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட ஜெர்மனி போன்ற நாடுகள் சில அணு உலைகளின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. மேலும் பல நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.ஆனால் இந்தியாவில் மேலும் அணு உலைகளைப் பெருக்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன!மனித உயிரையும், பிற உயிர்களையும், சுற்றுச்சூழலையும் அழிக்கும் அணு உலைகள் பற்றிய உண்மைகளை வெளியிடாமல் ஒளிவு, மறைவு அரசியலில் நாடுகள் இறங்கக் காரணம் சர்வதேச அளவில் பெருகிவரும் அணு உலை வர்த்தகம், அணு எரிபொருள் வர்த்தகம் ஆகியவையே.