மெக்சிகோவில் உள்ள கான்கன் நகரில் நேற்று துவங்கிய ஐ.நா. வானிலை மாநாட்டில் துவக்கவுரை ஆற்றிய மெக்சிகோ அதிபர் பிலிப் கால்டெரான் தனது உரையில், அரசுகளின் இறையான்மையை வானிலை பொருட்படுத்தாது." என்று கூறியுள்ளார்.
அதாவது நாடுகள் தங்கள் இறையாண்மை பற்றிய சிந்தனையைக் கடந்து உலகளாவிய மானுடம் என்ற கருத்தைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று அவர் தனது உரையில் கூறியுள்ளார்.
"நாம் நமது சொந்த நலங்களைக் கடந்து சிந்திக்க முடியாமல் போனால் அது மிகப்பெரிய துன்பத்தைத்தான் ஏற்படுத்தும். இது நம்மை தோல்வியை நோக்கியே இட்டுச் செல்லும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அதாவது கியோட்டோ உடன்படிக்கையை செயல்படுத்துவதிலும் அதனை தீவிரப்படுத்துவதையும் கோபன்ஹேகன் மாநாடு செய்ய முடியாமல் படுதோல்வியடைந்ததோடு தமாஷான சில முடிவுகளுடன் நிறைவடைந்தது.
தொழிற்துறையில் முன்னேற்றம் கண்ட நாடுகளுக்கும், வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையேயும் சுற்றுசூழல் மாநாடுகளில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன.
அதாவது ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை நாசப்படுத்தலாம் என்பதற்கு சட்ட ரீதியான வரைவு தேவை என்று அனைத்து நாடுகளும் கூறிவருகின்றன. ஆனால் எதுவும் செயல்முறை அடைவதில்லை.
புவிவெப்பமடைதலால் பாதிப்படையும் ஏழை நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் அளிப்பது என்ற விஷயம் கூட வெற்று அரசியல் பிரகடனமாகவே கோபன்ஹேகனில் முன்மொழியப்பட்டது. இதிலும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வானிலை மாற்ற விவகாரத்தில் ஐ.நா.வின் நடைமுறை நாளுக்கு நாள் பயனற்றதாய் போய்க்கொண்டிருக்கிறது என்று பபுவா நியூகினியா நாட்டு அதிகாரி கெவின் கான்ராட் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு வரை 30பில்லியன் டாலர்கள் தொகையை ஒவ்வொரு முன்னேறிய நாடுகளும் கொடுத்து வானிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு உதவிபுரியவேண்டும் என்பதில் ஒப்பந்தம் ஏற்படவேண்டும் என்று இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஏழை நாடுகள் கருதுகின்றன.
மழைக்காடுகளைப் பாதுகாப்பது, வளரும் நாடுகளுக்கு பசுமைக் காப்பு தொழில்நுட்பங்களை அளிப்பது என்ற விவகாரத்திலும் கூட இன்னமும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கியோட்டோ ஒப்பந்தத்தின் படி 2012ஆம் ஆண்டுக்குள் தொழிற்துறையில் முன்னேறிய நாடுகள் கரியமிலவாயு வெளியேற்றத்தை 5% குறைக்கவேண்டும் என்பது மீண்டும் இந்த மாநாட்டில் உயிர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இருப்பினும் இந்த மாநாட்டில் முதல் நாள் முடிவில் "கான்கன் மாநாடு ஒன்றையும் சாதித்து விடாது" என்ற வெறுப்புத்தான் ஏற்பட்டதாக பலர் உணர்ந்தனர் என்று பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகின் இரண்டு பெரிய, முன்னணி கரியமிலவாயு வெளியேற்றிகளான அதாவது சுற்றுச்சூழலை மாசு படுத்துவதில் முன்னணி வகிக்கும் இரண்டு நாடுகளான அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் அதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
பின்பு என்ன தீர்வை எட்ட முடியும்?
கான்கன் மாநாடு வெற்றி அடைந்தது என்பதை பறைசாற்ற அமெரிக்கா, சீனா இடையே வெப்பவாயு வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் மாசு விவகாரங்களில் புரிந்துணர்வு ஏற்படுவது அவசியம் என்று ஐ.நா. கூறுகிறது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், ரஷ்ய காட்டுத்தீயினால் மாஸ்கோ நகரம் முழுதுமே புகைமண்டலமாக மாறியது, பொதுவாக வெப்பநிலை உயர்ந்து வருவது, என்ற மோசமான பின்னணியில் இந்த கான்கன் மாநாடு நேற்று கண் திறந்துள்ளது.
"சுற்றுசூழலுக்கும் இயற்கைக்கும் நாம், மனிதர்கள் செய்த மாபெரும் பிழைகள் இன்று வானிலை மாற்றம் என்ற விலையைக் கொடுக்க செய்துள்ளது." என்று மெக்சிகோ அதிபர் கால்டெரான் தெரிவித்திருப்பது நாம் மேற்சொன்ன கருத்துச்சூழலில்தான் என்பதையும், கால்டெரான் கூறுவதில் உள்ள சுடும் உண்மையையும் நாடுகள் உணரவேண்டும்.
மெக்சிகோவிலும் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது.
சைபீரியாவிலும், துருவப்பிரதேசங்களிலும் உள்ள பனிப்படிவுகளின் அடியில் புதைந்திருக்கும் கரியமிலவாயுவும், மீத்தேனும் "சுற்றுசூழல் அணுகுண்டு" என்று ஒரு விஞ்ஞானி அச்சுறுத்தியுள்ளதை நாம் ஏற்கனவே சுட்டியிருந்தோம்.
புவிவெப்பமடைதல் அதிகமானால் உறைபனி உருகி அதில் உள்ள கரியமில்வாயுவும், மீத்தேனும் வான்வெளிக்கு பெருமளவு செல்லும்போது என்ன ஆகும் என்பதை கணிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
நடப்புச் சந்ததியினர் எதிர்காலச் சமுதாயத்திற்கு வறட்சியையும், தீவிர வெள்ளங்களையும், மிகப்பெரிய புயல்கள், காட்டுத்தீ, நிலநடுக்கங்கள் ஆகியவற்றை விட்டுச் செல்லப்போகிறதா, அல்லது அவர்கள் வாழ்வதற்கும் ஏதாவது ஒரு சிறு பொறியை ஏறப்டுத்துமா என்பதை கான்கன் மாநாடு தீர்மானிக்கும்.