ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரமான பூகம்பம் மற்றும் அதனையடுத்த மிகப்பெரிய ராட்சத சுனாமி ஆகியவற்றினால் கடும் சேதமடைந்துள்ள ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிவீச்சு அளவு செர்னோபில் அணு விபத்து மட்டத்துக்கு உயர்த்தப்பட்டாலும் நிலைமை செர்னோபில்லை விட மோசமானதாகவே இருக்கும் என்று ஜெர்மனி கிரீன் பீஸ் தலைவரும், ஜப்பான், டோக்யோ கதிர்வீச்சு கண்காணிப்புக் குழுவிலும் இடம்பெற்றுள்ள தாமஸ் புரூயர் எச்சரித்துள்ளார்.
அணு விபத்து குறித்த அபாய அளவுகள் 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட செர்னோபில் அணு விபத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. அதாவது இது உருவாக்கபட்டதன் நோக்கம் அணு விபத்து ஏற்பட்டால் அதன் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு காலத்தில் தகவல்களை அளிப்பதாகும்.
அணு உலையை குளிரூட்டும் நடவடிக்கைகள் தோல்வியடைகிறது அல்லது வெற்றியடைகிறது என்பதல்ல விஷயம், 3 வாரங்களுக்குப் பிறகு அபாய மட்டத்தை 7ஆக உயர்த்துவது ஏன்? முன்னமேயே இதன் விளைவுகளை அறிந்திருக்கும்போது ஏன் தாமதமாக ஜப்பான் அரசு அபாய அளவை உயர்த்தியது? என்று கேள்வி எழுப்புகிறார் தாமஸ் புரூயர்.
அதுவும் ஜப்பானிடம் போதுமான தரவுகள் உள்ளன. இதன் மூலம் ஜப்பான் அரசு சாதித்தது என்ன? 3 வாரங்களை விரயம் செய்ததுதான்.
7 என்று உயர்த்தப்பட்டதன் விளைவுகள் பற்றி புரூயர் கூறுகையில் ஃபுகுஷிமாவில் 4 அணு உலைகள் உள்ளன. இதில் 3 முழுதுமோ அல்லது ஏறக்குறைய முக்கால்வாசி பழுதடைந்து விட்டது. 4வது அணு உலையில் செலவு செய்யப்பட்ட எரிபொருள் உள்ளது. அதிலிருந்துதான் மிகப்பெரிய வெடிப்பு அன்று ஏற்பட்டது. எனவே ஒவ்வொரு அணு உலையிலிருந்தும் வெளியாகும் கதிர்வீச்சின் அளவு 7 என்றே நாம் கருதவேண்டியுள்ளது. இப்படிப் பார்த்தால் செர்னோபில்லை விட இது மோச்மானதாகும்.
மேலும் செர்னோபில்லைச் சுற்றி கிராமப்புறப்பகுதிகளே அதிகம் இருந்தன. மக்கள் தொகை குறைவு, ஆனால் புகுஷிமா பகுதி அடர்த்தியான மக்கள் தொகை உள்ள பகுதி. லட்சக் கணக்கனோர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால்தான் அணு விபத்து என்று நிகழ்ந்தால் செர்னோபில்லை விட விளைவுகள் மோசமாகும் ஏனெனில் இவ்வளவு பெரிய மக்கள் தொகை உள்ள பகுதியை பாதுகாப்பது, அணு விபத்து மேலாண்மை செய்வதும் கடினம்.
இன்னமும் 20 கிமீ சுற்றுப்பரப்பு என்றே பேசி வருகின்றனர். ஆனால் விரைவில் அப்பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது நல்லது. ஃபுகுஷிமாவின் ஒட்டுமொத்த பகுதியையும் அவர்கள் அணுக்கசிவு கண்காணிப்பு எல்லைக்குட்படுத்துவது நல்லது.
இன்னமும் நிறைய பேர் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிறு விவசாய மக்களுக்கு இன்னமும் அப்பகுதி பயிர்களில் விளையும் உணவுப்பொருளை உண்ணலாமா என்பது பற்றியெல்லாம் ஒன்றும் அறிவுறுத்தப்படவில்லை.
எந்த விதத் தகவல்களும் இல்லாமல் ஃபுகுஷிமா பகுதியில் மக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஃபுகுஷிமா பகுதியில் உள்ள கிரீன் பீஸ் சுற்றுச்சூழல் அறிஞர் தாமஸ் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.