மெக்சிகோவில் நடைபெறும் வானிலை மாற்ற மாநாடு எதிர்பாராத முடிவுகளை அளிக்கும் என்று எதிர்பார்த்தாலும், நாடுகளை சட்டரீதியாக பிணைக்கும் ஒப்பந்தம் ஏற்படாது என்று மெக்சிகோ அதிபர் பிலிப் கால்டரோன் ஐயம் எழுப்பியுள்ளார்.
இந்த மாத இறுதியில் மெக்சிகோவின் கான்கான் நகரில் 194 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறுகிறது.
சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற மாநாட்டில் உயிர்ப்பரவலைப் பாதுகாப்பது குறித்த முக்கியமான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல முன்னணி நாடுகள் (அமெரிக்கா நீங்கலாக) அங்கு கொண்டு வரப்பட்ட 20அம்ச திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தன.ர்.''
இந்த நிலையில் கரியமில வாயு வெளியேற்றம் உள்ளிட்ட பிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரம் மெக்சிகோ மாநாட்டில் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் மெக்சிகோ நாட்டு அதிபர் சட்ட ரீதியாக பிணைக்கும் எந்த ஒரு ஒப்பந்தமும் சாத்தியமில்லை என்று தனது ஐயத்தை தற்போது எழுப்பியுள்ளார்.
கோபன்ஹேகன் மாநாட்டில் அமெரிக்காவு, சீனாவும் தங்களது பிடியை விட்டுக் கொடுக்காமல் இருந்ததால் அந்த மாநாடு தோல்வியில் முடிந்ததோடு, மாநாடு ஒபாமாவின் வருகை மூலமும் அவரது உரையின் மூலமும் கேலிக்கூத்தாகிப் போனது.
இந்த நிலையில் கான்கான் மாநாட்டில் எதிர்பாராத முடிவுகள் ஏற்பட்டாலும் சட்ட ரீதியாக பிணைக்கும் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை என்று மெக்சிகோ அதிபர் கால்ட்ரான் தெரிவித்துள்ளார்.
வெப்பவாயு வெளியேற்ற விவகாரத்தில் அதிகமாகப் புகையைக் கக்கி வரும் அமெரிக்கா, சீனா இடையே விட்டுக் கொடுக்காத பிடிவாதப் போக்கு காணப்படுவதால் இழுபறி நீடித்து வருகிறது.
சீனாவும், அமெரிக்காவும் ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றம்சாற்றிக் கொண்டு எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் தடுத்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் எழுப்பியுள்ளனர்.
எனவே மெக்சிகோ நாட்டு அதிபர் கான்கான் மாநாட்டின் மூலம் பூமிக்கு எந்த வித விடிவும் ஏற்படாது என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
சுற்றுசூழல் விவகாரத்தில் நாட்டுக்குள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் சட்ட ரீதியான பிணைப்பு இல்லையெனில் எந்த வித ஒப்பந்தமும் கையெழுத்திட்டு பயன் என்ன என்று பசுமை அமைப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இம்மாதம் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை கான்கான் மாநாடு நடைபெறுகிறது.